தென் ஆப்பிரிக்க டெஸ்ட்: முதல் இன்னிங்ஸ்சில் இந்தியா 327 ரன்களுக்கு ஆல் அவுட்


தென் ஆப்பிரிக்க டெஸ்ட்: முதல் இன்னிங்ஸ்சில் இந்தியா 327 ரன்களுக்கு ஆல் அவுட்
x
தினத்தந்தி 28 Dec 2021 9:39 AM GMT (Updated: 28 Dec 2021 9:39 AM GMT)

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி 327 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

செஞ்சூரியன்,

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் செஞ்சூரியனில் நேற்று முன்தினம் தொடங்கியது. இப்போட்டியில் ‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

‘பாக்சிங் டே’ என்று அழைக்கப்படும் இந்த டெஸ்டில் இந்தியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில்  முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 272 ரன்கள் எடுத்துள்ளது. லோகேஷ் ராகுல் 122 ரன்களுடனும் (248 பந்து, 17 பவுண்டரி, ஒரு சிக்சர்), ரஹானே 40 ரன்களுடனும் (81 பந்து, 8 பவுண்டரி) களத்தில் இருந்தனர்.  

இன்று 2-வது நாள் ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்க இருந்தது. ஆனால், மழை காரணமாக ஆட்டம் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. நிலைமை சரியான பின்னர் ஆட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று ஒரு பந்து கூட வீச முடியாமல்ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மூன்றாம் நாளான இன்று வானிலை சரியானதால் போட்டி தொடங்கப்பட்டது. முதல் நாளில் களத்தில் இருந்த கே.எல் ராகுலும், ரஹானேவும் ஆட்டத்தை தொடர்ந்தனர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கே.எல்.ராகுல் (123 ரன்கள்) ரபாடா பந்துவீச்சிலும், ரஹானே (48 ரன்கள்) லுங்கி நெகிடி பந்துவீச்சிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதைத்தொடர்ந்து இந்தியாவின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல் சரிந்தது. அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் அனைவரும் ரபாடா மற்றும் லுங்கி நெகிடியின் பந்துவீச்சில் தாக்குபிடிக்க முடியாமல் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில் இந்திய அணி105.3 ஓவர்களில் 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது.

இந்திய அணி கடைசி 15.3 ஓவர்களில் 55 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணியின் தரப்பில் லுங்கி நெகிடி அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸ்சில் விளையாட உள்ளது. 


Next Story