பெண்கள் உலகக்கோப்பை போட்டி; இந்திய அணி 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தது!


பெண்கள் உலகக்கோப்பை போட்டி; இந்திய அணி 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தது!
x
தினத்தந்தி 16 March 2022 3:48 AM GMT (Updated: 16 March 2022 3:48 AM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான பெண்கள் உலகக்கோப்பை போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 134 ரன்கள் எடுத்தது.

மவுன்ட் மாங்கானு, 

நியூசிலாந்தில் நடந்து வரும் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று மவுன்ட் மாங்கானுவில் நடைபெறும் 15-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இன்றைய போட்டியில்  டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 

இதன்படி இந்திய அணி முதலாவதாக பேட்டிங் செய்தது. இந்திய அணியின் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய யாஷ்டிகா பாட்டியா 8 ரன்னிலும், அவரை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் மிதாலி ராஜ் 1 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

அடுத்து வந்த  தீப்தி சர்மா, வந்த உடனேயே ரன் அவுட் ஆனார். இதனால் இந்திய அணி 28 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது.

பின்னர் வந்த ஹர்மன்பிரீத் கவுர் அணியை சரிவிலிருந்து மீட்டெடுப்பார் என்ற நிலையில், அவரும் 14 ரன்னில் நடையை கட்டினார். அதன் பின் வந்த சிநேஹ் ராணா, ரன் கணக்கை தொடங்காமலேயே ஆட்டமிழந்தார்.

இதனால் இந்திய அணியின் ஸ்கோர் சரிவு பாதையில் சென்றது. 

ஒருபுறம் விக்கெட்டுகள் மளமளவென விழ, மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்திய அணி 100 ரன்களை தாண்டுமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய அணியின் விக்கெட்கீப்பர் ரிச்சா கோஷ் 33 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினார். அவருக்கு பக்கபலமாக ஆல் ரவுண்டர் ஜூலன் கோஸ்வாமி 20 ரன்கள் எடுத்தார்.இருவரும் 47 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்தனர்.

இறுதியில் இந்திய மகளிர் அணி 36.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்கள் எடுத்தது.

இங்கிலாந்து அணியில் சிறப்பாக பந்துவீசிய சரோலெட் டீன் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதனையடுத்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து மகளிர் அணி பேட்டிங் செய்து வருகிறது.

Next Story