டு பிளெஸ்சிஸ் அதிரடி ஆட்டம்: பஞ்சாப் வெற்றிபெற 206 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பெங்களூரு


டு பிளெஸ்சிஸ் அதிரடி ஆட்டம்: பஞ்சாப் வெற்றிபெற 206 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பெங்களூரு
x
தினத்தந்தி 27 March 2022 3:53 PM GMT (Updated: 27 March 2022 3:53 PM GMT)

பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்துள்ளது.

மும்பை,

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரண்டாவதாக நடைபெற்ற 3 ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதி வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி பெங்களூரு அணி முதலில் விளையாடியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன்  டு பிளெஸ்சிசும், அனுஜ் ராவத்தும் களமிறங்கினர். அனுஜ் ராவத் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். 

இதையடுத்து டு பிளெஸ்சிசுடன் விராட் கோலி கைகோர்த்தார். இருவரும் பஞ்சாப் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். அதிலும் குறிப்பாக டு பிளெஸ்சிஸ் எதிரணியின் பந்துகளை நாலாபுறமும் சிக்சருக்கு பறக்கவிட்டு அசத்தினார். இந்த ஜோடியை பிரிக்கமுடியாமல் பஞ்சாப் பவுலர்கள் தவித்தனர். 

 சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டு பிளெஸ்சிஸ், 88 ரன்களில் (57 பந்து, 3 பவுண்டரி, 7 சிக்சர்) ஆட்டமிழந்தார். ஆட்டத்தின் கடைசியில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக்கும் தன் பங்குக்கு 3 சிக்சர்களை பறக்கவிட்டார். இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது. விராட் கோலியும்(41), தினேஷ் கார்த்திக்கும்(32) ஆட்டமிழக்காமல் கடைசிவரை களத்தில் இருந்தனர். 

இதனை தொடர்ந்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி விளையாடி வருகிறது.


Next Story