கடன் தொல்லை தாங்க முடியாமல் விஷம் குடித்து வியாபாரி தற்கொலை


கடன் தொல்லை தாங்க முடியாமல் விஷம் குடித்து வியாபாரி தற்கொலை
x
தினத்தந்தி 3 May 2017 11:15 PM GMT (Updated: 4 May 2017 12:17 AM GMT)

விழுப்புரத்தில் உள்ள தங்கும் விடுதியில் கடன் தொல்லை தாங்க முடியாமல் விஷம் குடித்து வியாபாரி தற்கொலை, மனைவி- மகளுக்கு தீவிர சிகிச்சை

விழுப்புரம்

கடன் தொல்லை தாங்க முடியாமல் வியாபாரி விழுப்புரத்தில் உள்ள தங்கும் விடுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவருடன் விஷம் குடித்த மனைவி- மகளுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தனியார் தங்கும் விடுதி

கோயம்புத்தூர் நஞ்சப்பா சாலை பகுதியை சேர்ந்தவர் தேவராஜன் (வயது 46). இவர் அதே பகுதியில் மின் மோட்டார்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவருடைய மனைவி விஜயலட்சுமி (42). இவர்களது மகள் பாலசந்தோஷினி (17).

இந்த நிலையில், தேவராஜன் குடும்பத்தோடு ஏதாவது கோவிலுக்கு சென்று வரலாம் என்று முடிவு செய்தார். அதன்படி தேவராஜன், அவருடைய மனைவி, மகளுடன் கடந்த 1-ந் தேதி கோயம்புத்தூரில் இருந்து பஸ்சில் புறப்பட்டு, அன்று இரவு 8 மணிக்கு விழுப்புரம் வந்தார்.

விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே கே.கே.நகரில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதிக்கு சென்று அங்குள்ள விடுதி பொறுப்பாளரிடம், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோவில்களை சுற்றி பார்க்க இருப்பதாகவும், 2 நாட்கள் அறை வேண்டும் என்றுகூறி 3 பேரும் தங்கியுள்ளனர். அன்று இரவே விழுப்புரத்தில் உள்ள ஒரு தியேட்டரில் சினிமா பார்த்துள்ளனர். தொடர்ந்து, மறுநாள் (நேற்று முன்தினம்) காலை தேவராஜன் குடும்பத்துடன் தங்கும் விடுதியில் இருந்து வெளியே சென்று, மாவட்டத்தில் உள்ள சில கோவில்களுக்கு சென்றார். பின்னர், அன்று இரவு 9 மணிக்கு தங்கும் விடுதிக்கு அவர்கள் வந்தனர்.

3 பேர் தற்கொலை முயற்சி

இந்த நிலையில் நேற்று காலை 9 மணி ஆகியும் அவர்கள் தங்கியிருந்த அறையின் கதவு திறக்கப்படவில்லை. பின்னர் தங்கும் விடுதி ஊழியர்கள் அந்த அறையின் கதவை தட்டினார்கள். இருப்பினும் யாரும் கதவை திறக்கவில்லை.

இதனால் சந்தேகமடைந்த அவர்கள் இதுபற்றி உடனடியாக விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மருதப்பன், சத்தியசீலன் மற்றும் போலீசார், தங்கும் விடுதிக்கு விரைந்து சென்று தேவராஜன் குடும்பத்தினர் தங்கியிருந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது படுக்கையில் தேவராஜன் உள்ளிட்ட 3 பேரும் வாயில் நுரைதள்ளியவாறு மயங்கிய நிலையில் கிடந்தனர். அவர்கள் அருகில் குளிர்பான பாட்டிலும், விஷ பாட்டிலும் கிடந்தன.

வியாபாரி சாவு

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், உடனடியாக 108 ஆம்புலன்சை வரவழைத்து விஜயலட்சுமி, பாலசந்தோஷினி ஆகிய 2 பேரையும் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தேவராஜன் நிலைமை மிகவும் மோசமாக இருந்ததால் அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே தேவராஜன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனிடையே விஜயலட்சுமி, பாலசந்தோஷினி ஆகிய 2 பேருக்கும் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கடன் தொல்லை தாங்க முடியாமல் தேவராஜன் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வது என்று முடிவு செய்து குளிர்பானத்தில் விஷத்தை கலந்து மனைவி, மகள் ஆகியோருக்கு கொடுத்துவிட்டு அந்த விஷத்தை தானும் குடித்திருப்பது தெரியவந்தது. மேலும், போலீசார் நடத்திய விசாரணையில் வெளியான விவரம் வருமாறு:-

கடன்தொல்லை

தேவராஜனுக்கு கடந்த சில மாதங்களாக வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது. அந்த நஷ்டத்தை சமாளிக்க தன்னுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிலரிடம் வட்டிக்கு பணம் கடன் வாங்கியிருந்தார். அந்த கடனையும், அதற்குரிய வட்டித்தொகையையும் அடைக்க முடியாமல் தேவராஜன் மிகவும் கஷ்டப்பட்டு வந்தார். கடன் கொடுத்தவர்கள் அடிக்கடி தேவராஜன் வீட்டிற்கு சென்று கடனை திருப்பிக்கேட்டு நெருக்கடி கொடுத்தனர். கடன் தொல்லை மற்றும் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தேவராஜன் குடும்பம் மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளாகியது.

 இதனால் மன நிம்மதிக்காக விழுப்புரத்திற்கு வந்த தேவராஜன் திடீரென குடும்பத்துடன் விஷம் குடித்துள்ளார் என்பது தெரிந்தது. இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் விழுப்புரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story