நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டம்


நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 3 May 2017 10:22 PM GMT (Updated: 3 May 2017 10:22 PM GMT)

பட்டமேற்படிப்பில் அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வலியுறுத்தி நேற்று நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்,

அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்புக்கான சேர்க்கையில், அரசு டாக்டர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 சதவீத இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் டாக்டர்கள் பணி புறக்கணிப்பு, தர்ணா உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நாமக்கல்லில் இவர்களின் போராட்டம் நேற்று 14–வது நாளாக நீடித்தது.

அதையொட்டி தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். இதில் சங்க செயலாளர் அருள், பொருளாளர் அமுதா உள்பட உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

போராட்டம் தொடரும்

காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த உண்ணாவிரத போராட்டம் மாலை 4 மணிக்கு முடிவடைந்தது. இதில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க செயலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். இதற்கிடையே இந்த உண்ணாவிரத போராட்டம் இன்றும் (வியாழக்கிழமை) தொடரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் தலைவர் தனசேகரன் கூறியதாவது:– பட்டமேற்படிப்பில் அரசு டாக்டர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 50 சதவீத இடஒதுக்கீடு மீண்டும் கிடைக்கும் வரை எங்களின் போராட்டம் தொடரும் என்றார்.


Next Story