புதிதாக மனுசெய்பவர்களுக்கு விண்ணப்பித்த 21 நாட்களில் ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டு


புதிதாக மனுசெய்பவர்களுக்கு விண்ணப்பித்த 21 நாட்களில் ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டு
x
தினத்தந்தி 21 Jun 2017 10:15 PM GMT (Updated: 21 Jun 2017 1:48 PM GMT)

ரே‌ஷன்கார்டு கேட்டு புதிதாக மனுகொடுப்பவர்களுக்கு விண்ணப்பித்த 21 நாட்களில் ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டு வழங்கப்படும் என்று கலெக்டர் ராமன் தெரிவித்தார்.

வேலூர்,

ரே‌ஷன்கார்டு கேட்டு புதிதாக மனுகொடுப்பவர்களுக்கு விண்ணப்பித்த 21 நாட்களில் ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டு வழங்கப்படும் என்று கலெக்டர் ராமன் தெரிவித்தார்.

ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டுகள்

தமிழ்நாட்டில் புழக்கத்தில் உள்ள பழைய ரே‌ஷன்கார்டுகளுக்கு பதில் கடந்த ஏப்ரல்மாதம் 1–ந் தேதி முதல் ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் ஸ்மார்ட் கார்டுகள் வந்துள்ள நிலையில் பெரும்பாலானவர்களுக்கு ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டுகள் வரவில்லை.

அவர்கள் பழைய ரே‌ஷன்கார்டுடன் இணைத்த விவரங்கள் விடுபட்டுள்ளதால் மீண்டும் விவரங்கள், புகைப்படங்கள் சேகரிக்கும் பணிநடைபெற்று வருகிறது. அனைத்து விவரங்களும் சேகரிக்கப்பட்டு அதன்பிறகு அவர்களுக்கு ஸ்மார்ட் ரே‌ஷன்கார்டு வழங்கப்படும். இந்த நிலையில் புதிதாக ரே‌ஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு இ–சேவை மையம் மூலம் ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டு வழங்கப்படுகிறது.

21 நாட்களில் வழங்கப்படும்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அரசு இ–சேவை மையத்தில் 2 பேருக்கு ஸ்மார்ட் ரே‌ஷன்கார்டுகளை வழங்கி இதனை கலெக்டர் ராமன் தொடங்கிவைத்தார். அப்போது அவர் கூறியதாவது:–

வேலூர் மாவட்டத்தில் 8 லட்சத்து 21 ஆயிரம் ரே‌ஷன் கார்டுகள் உள்ளன. இந்த கார்டுகளுக்கு பதில் ஏப்ரல் 1–ந் தேதி முதல் ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 3 லட்சத்து 21 ஆயிரம்பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 5 லட்சம் பேருக்கு படிப்படியாக வழங்கப்படும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

வேலூர் மாவட்டத்தில் 13 தாலுகா அலுவலகங்கள் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அரசு இ–சேவை மையங்களில் ஸ்மார்ட் ரே‌ஷன்கார்டு வழங்கப்படும். புதிதாக ரே‌ஷன்கார்டுகேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு அவர்கள் விண்ணப்பித்த 21 நாட்களில் ஸ்மார்ட் ரே‌ஷன்கார்டு வழங்கப்படும்.

ஆதார் எண்

விண்ணப்பத்துடன் கண்டிப்பாக ஆதார் எண்ணை இணைக்கவேண்டும், புகைப்படம் வழங்கவேண்டும். ஆதார் இணைத்தாலே அவர்களுடைய பெயர்கள் வேறு ரே‌ஷன்கார்டுகளில் இருந்தால் அது நீக்கப்பட்டுவிடும். விண்ணப்பித்த 21 நாட்களில் அவர்கள் கொடுத்துள்ள செல்போன் எண்ணுக்கு ரகசிய எண் வரும். அதைகொடுத்து ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டை பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது, மாவட்ட வழங்கல் அலுவலர் வேணுசேகரன் உடனிருந்தார்.



Next Story