நெல்லை அருகே 2 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு


நெல்லை அருகே 2 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
x
தினத்தந்தி 21 Jun 2017 9:00 PM GMT (Updated: 21 Jun 2017 6:23 PM GMT)

நெல்லை அருகே 2 கோவில்களில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

நெல்லை,

நெல்லை அருகே 2 கோவில்களில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

சுடலைமாடசாமி கோவில்

நெல்லை அருகே உள்ள மணிமூர்த்தீசுவரத்தில் இருந்து சேந்திமங்கலம் செல்லும் சாலையில் சுடலைமாடசாமி கோவிலும், அதன் அருகில் இசக்கியம்மன் கோவிலும் உள்ளன. இந்த கோவில்களில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை என்பதால் இரவில் சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் சாமி கும்பிட வந்த பக்தர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இதைத்தொடர்ந்து நள்ளிரவில் மர்ம நபர்கள் கோவில்களில் உள்ள உண்டியல்களின் பூட்டை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்றுவிட்டனர். நேற்று காலையில் அந்த வழியாக சென்றவர்கள் உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக தச்சநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் விசாரணை

இதுபற்றி தகவல் அறிந்த தச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருட்டு நடந்த கோவில்களை பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வந்து ரேகைகளை பதிவு செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவில்களில் பணத்தை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.


Next Story