தவறான சிகிச்சையால் இளம்பெண் இறந்ததாக புகார்: தனியார் ஆஸ்பத்திரி தற்காலிமாக மூடப்பட்டது


தவறான சிகிச்சையால் இளம்பெண் இறந்ததாக புகார்: தனியார் ஆஸ்பத்திரி தற்காலிமாக மூடப்பட்டது
x
தினத்தந்தி 21 Jun 2017 8:30 PM GMT (Updated: 21 Jun 2017 6:48 PM GMT)

மூலைக்கரைப்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் உதவி கலெக்டர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.

இட்டமொழி,

தவறான சிகிச்சையால் இளம்பெண் இறந்ததாக கூறப்பட்ட புகாரில் மூலைக்கரைப்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் உதவி கலெக்டர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு பின்னர் அந்த ஆஸ்பத்திரி தற்காலிகமாக இழுத்து மூடப்பட்டது.

இளம்பெண் சாவு

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள கல்லத்தி பகுதியை சேர்ந்தவர் மனோகர். இவருடைய மகள் உஷாராணி(வயது 17). கடந்த 18–ந் தேதி இரவு உஷாராணிக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக மூலைக்கரைப்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை முடிந்து அவர் வீடு திரும்பினார். சிறிது நேரத்தில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அடுத்த சில வினாடிகளில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து தனது மகள் சாவுக்கு தவறான சிகிச்சை அளித்ததே காரணம் என கூறி ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் மீது மூலைக்கரைப்பட்டி போலீசில் மனோகர் புகார் செய்தார். புகாரின் பேரில், போலீசார் உஷாராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கலெக்டரிடம் புகார்

நேற்று முன்தினம் மதியம் உஷாராணியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், அந்த தனியார் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சாலை மறியலும் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் போலீசார், இதுதொடர்பாக மூலைக்கரைப்பட்டி போலீஸ் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்துவோம் எனக்கூறி சாலைமறியலை கைவிடச் செய்தனர்.

பின்னர் போலீஸ் நிலையத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படாததால், மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று கலெக்டரிடமும் புகார் மனு கொடுத்தனர். இதுதொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டார்.

ஆஸ்பத்திரி மூடப்பட்டது

அதன் பேரில் சேரன்மாதேவி உதவி கலெக்டர் ஆகாஷ், நெல்லை மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் இளங்கோவன், நாங்குநேரி தாசில்தார் ஆதி நாராயணன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் நேற்று மூலைக்கரைப்பட்டிக்கு சென்றனர்.

அங்கு உஷாராணி சிகிச்சை பெற்ற தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று ஆய்வு நடத்தினர். அங்கு விசாரணை நடத்திய பின்னர் அந்த ஆஸ்பத்திரியை தற்காலிகமாக இழுத்து மூடினர்.

போலி பெண் டாக்டர் மீது வழக்கு

அதனை தொடர்ந்து அந்த ஆஸ்பத்திரியின் அருகில் உள்ள மற்றொரு ஆஸ்பத்திரிக்கும் சென்று அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். அங்குள்ள மருத்துவரிடம் விசாரணை நடத்தியதில் அங்கு ஜெயா(45) என்பதுவர், சித்தா மருத்துவம் படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி போலீசில் நெல்லை மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் இளங்கோவன் புகார் செய்தார். அதன்பேரில் ஜெயா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடல் அடக்கம்

இதற்கிடையே நேற்று பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் உஷாராணியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை பெற்றுச் சென்ற அவர்கள் தங்கள் ஊருக்கு கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.


Next Story