சிவகங்கை அருகே கணவன்–மனைவி கொலை? கிணற்றில் பிணமாக மிதந்தனர்


சிவகங்கை அருகே கணவன்–மனைவி கொலை? கிணற்றில் பிணமாக மிதந்தனர்
x
தினத்தந்தி 21 Aug 2017 11:00 PM GMT (Updated: 21 Aug 2017 7:12 PM GMT)

சிவகங்கை அருகே வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான கணவன்–மனைவி கிணற்றில் பிணமாக மிதந்தனர். அவர்கள் கொலை செய்யப்பட்டார்களா என்பது குறித்து போலீஸ் விசாரணை நடக்கிறது.

சிவகங்கை,

சிவகங்கையை அடுத்த முத்துபட்டியை சேர்ந்தவர் முத்தையா(வயது 75). இவரது மனைவி பாக்கியம்(70). இவர்களுக்கு வேல்முருகன் என்ற மகனும், முத்துலட்சுமி, தமிழரசி, ஜெயா ஆகிய 3 மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். முத்தையா கல்வித்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். பாக்கியம் தாய்சேய் நலவிடுதியில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். கணவன்–மனைவி 2 பேரும் முத்துபட்டியில் தங்களுக்கு சொந்தமான தோட்டத்துடன் கூடிய வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை முத்தையாவின் வீட்டின் அருகேயுள்ள அரிசி ஆலைக்கு வேலை தொடர்பாக வந்த உறவினர் ஒருவர், முத்தையாவை பார்க்க சென்றார். அப்போது முத்தையாவின் வீடு திறந்து கிடந்தது. வீட்டினுள் மின் விளக்குகள் எரிந்த படியும், மின்விசிறி ஓடியபடியும் இருந்தது. இத்துடன் வீட்டின் அலமாரியும் திறந்து கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவன்–மனைவியை தேடி பார்த்தார். அப்போது வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் முத்தையாவும், அவரது மனைவி பாக்கியமும் பிணமாக மிதந்தனர். உடனடியாக இதுகுறித்து சிவகங்கை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் கிடைத்த சிவகங்கை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்–இன்ஸ்பெக்டர் பூமிநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். இதனை தொடர்ந்து சிவகங்கை தீயணைப்பு படையினர் வந்து, கயிறு மூலம் கணவன்–மனைவி உடல்களை மீட்டனர். பின்னர் அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை பதிவு செய்தனர். இத்துடன் போலீஸ் மோப்ப நாய் லைக்கா வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அப்போது நாய் லைக்கா, முத்தையா வீட்டில் இருந்து மோப்பம் பிடித்து நேராக அவர் பிணமாக கிடந்த கிணறு வரை சென்றது. பின்னர் அதை சுற்றியுள்ள பகுதிக்கு சென்று மீண்டும் அந்த பகுதிக்கே வந்துவிட்டது.

இந்த சம்பவம் குறித்து சிவகங்கை தாலுகா போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் முத்தையாவும், அவரது மனைவியும் நகைக்காக கொலை செய்யப்பட்டார்களா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

கணவன்–மனைவி 2 பேர் கிணற்றில் பிணமாக கிடந்தது முத்துப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தகவல் அறிந்த அப்பகுதியை சேர்ந்த மக்கள் முத்தையா வீட்டில் கூடினர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

Next Story