10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Aug 2017 11:00 PM GMT (Updated: 22 Aug 2017 7:22 PM GMT)

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நாகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (ஜாக்டோ-ஜியோ) சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாகை தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ ஒருங்கிணைப்பாளர் பாலசண்முகம், அரசு ஊழியர் சங்க வட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், அரசு பணியாளர் சங்க வட்ட தலைவர் பரமஹம்சன் ஆகியோர் தலைமை தாங்கினர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும்.

நிரந்தர ஊதிய விகிதம் இல்லாத அரசு பணியாளர்களுக்கு நிரந்தர ஊதிய விகிதம் வழங்க வேண்டும். டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதால், அதில் பணிபுரிந்த பணியாளர்களை அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களில் நிரந்தர பணியமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இதில் உயர்நிலை, மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தை சேர்ந்த சிவகுமார், தமிழக தமிழாசிரியர் கழகத்தை சேர்ந்த ராஜராஜன், ஆசிரியர் பயிற்றுனர் சங்கத்தை சேர்ந்த சண்முகக்கனி, மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் சங்கத்தை சேர்ந்த வேதபுரீஸ்வரன், ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியை சேர்ந்த எழிலரசன், தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணியை சேர்ந்த முத்துகிருஷ்ணன், அரசு பணியாளர் சங்க மாநில துணை தலைவர் செல்வன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அந்துவன்சேரல், ஜாக்டோ-ஜியோ மாவட்ட நிதி காப்பாளர் லட்சுமிநாராயணன், இந்திய தொழிற்சங்க மைய மாவட்ட செயலாளர் சீனிமணி, அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் சவுந்தரராஜன், மாவட்ட செயலாளர் அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவர் தாமோதரன் நன்றி கூறினார். அரசு ஆசிரியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் நாகையில் உள்ள பள்ளிகள் வெறிச்சோடி காணப்பட்டன. அதேபோல அரசு அலுவலகங்களும் வெறிச்சோடின.

திருமருகல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (ஜாக்டோ- ஜியோ) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ-ஜியோ ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். பல்வேறு சங்கங்களை சேர்ந்த ஒருங்கிணைப்பாளர்கள் மணி, சுப்பிரமணியன், தேன் மொழி, மாணிக்கவாசகம், முருகேசன், தங்கையன், மரகதம், ராஜேந்திரன், குருநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைந்து 7-வது ஊதிய மாற்றத்தினை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தமிழ்நாடு் பட்டதாரி ஆசிரியர் சங்கத்தை சேர்ந்த ராஜேந்திரன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தை சேர்ந்த முருகேசன், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த நாகராஜ் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியை சேர்ந்த சந்தோஷ் காட்சன், கிராமசுகாதார செவிலியர் சங்கத்தை சேர்ந்த மரகதம், சத்துணவு ஊழியர் சங்கத்தை சேர்ந்த சுப்பிரமணியன், மேல்நிலைப்பள்ளி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை சேர்ந்த ராஜேந்திரன், தமிழ்நாடு தொழிற்கல்வி ஆசிரியர் சங்கத்தை சேர்ந்த கவுரிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story