பிரதமர் மோடியின் படத்தை வெளியிடுபவர்களுக்கு பரிசு நடிகை ரம்யா அறிவிப்பு


பிரதமர் மோடியின் படத்தை வெளியிடுபவர்களுக்கு பரிசு நடிகை ரம்யா அறிவிப்பு
x
தினத்தந்தி 22 Aug 2017 11:30 PM GMT (Updated: 22 Aug 2017 10:48 PM GMT)

மழையால் பாதித்த பகுதிகளை பார்வையிடுவது போல பிரதமர் மோடியின் படத்தை வெளியிடுபவர்களுக்கு ரூ.25 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று நடிகை ரம்யா அறிவித்துள்ளார்.

பெங்களூரு,

குஜராத், பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழைக்கு பலர் உயிர் இழந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் தங்களது உடைமைகளை இழந்து உள்ளனர். ஆனால் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடி பார்வையிடவில்லை என்றும், பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறவில்லை என்றும் காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பிரிவு தலைவியும், பிரபல நடிகையுமான ரம்யா பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவு செய்துள்ளார். அதில், நடிகை ரம்யா கூறி இருப்பதாவது:–

“குஜராத், பீகார், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்யும் கனமழையால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அந்த மாநிலங்களுக்கு சென்று மழையால் பாதித்த பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிடுவது போல உள்ள படம் இருந்தால், அதனை சமூக வலைதளங்களில் வெளியிடலாம். அவ்வாறு வெளியிடுபவர்களுக்கு ரூ.25 ஆயிரம் பரிசு வழங்கப்படும். எக்காரணத்தை கொண்டும் மார்பிங் செய்து படத்தை வெளியிடக்கூடாது“.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடமாநிலங்களில் பெய்யும் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி செல்லாத காரணத்தால், இதுபோன்று நடிகை ரம்யா தனது கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.


Next Story