மசினகுடி, பொக்காபுரம் பகுதிகளில் யானை வழித்தடங்களில் கட்டப்பட்ட கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீசு


மசினகுடி, பொக்காபுரம் பகுதிகளில் யானை வழித்தடங்களில் கட்டப்பட்ட கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீசு
x
தினத்தந்தி 20 Sep 2017 11:00 PM GMT (Updated: 20 Sep 2017 8:14 PM GMT)

வனப்பகுதியை ஒட்டி உள்ள மசினகுடி, பொக்காபுரம் பகுதிகளில் யானை வழித்தடங்களில் கட்டப்பட்ட கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீசு வழங்கப்பட்டு வருகிறது என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

ஊட்டி,

ஊட்டி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் தூய்மை பணியை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர், துடைப்பத்தால் அங்கிருந்த குப்பைகளை அகற்றினார். இதில் அரசு ஆஸ்பத்திரி இணை இயக்குனர் டாக்டர். ரகுபதி, கண்காணிப்பாளர் டாக்டர். கிரியன், நகராட்சி கமி‌ஷனர் (பொறுப்பு) ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து நகராட்சி சுகாதார பணியாளர்கள், அரசு ஆஸ்பத்திரி சுகாதார பணியாளர்கள் ஆகியோர் இணைந்து வளாகத்தில் இருந்த குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர். அரசு ஆஸ்பத்திரி நுழைவு வாயில் பகுதியில் இருந்த புதர்கள் வெட்டி அகற்றப்பட்டன. மேலும் உணவுக்கழிவுகளை கொட்டுவதற்காக 5 அடி ஆழத்தில் குழி தோண்டப்பட்டது.

இதையடுத்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தூய்மையே சேவை திட்டத்தின் கீழ், கடந்த 15–ந் தேதி முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 2–ந் தேதி வரை மாவட்டத்தில் உள்ள முக்கியமான இடங்களில் குப்பைகள் சேராமல் தூய்மைப்படுத்தும் பணி யில் மாவட்ட அளவிலான உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு செயல்படுத்த உள்ளனர். இந்த திட்டத்தின் படி, ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் தூய்மை பணி இன்று (நேற்று) தொடங்கியது.

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சிறு பாலங்கள் மற்றும் பெரிய பாலங்களின் அடிப்பகுதியில் எந்தவிதமான மண் அடைப்பும் இல்லாமல் அகற்றவும், தடையில்லாமல் மழைநீர் செல்ல கால்வாய்களை சீரமைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

கிராமப்புற சாலைகளில் விவசாய விளைநிலங்களில் ஏற்பட்ட மண் அரிப்பால் சாலையில் குவிந்த மண் போக்குவரத்து இடையூறாக உள்ளது. அதை அதிகாரிகள் பொக்லைன் எந்திரங்கள் மூலம் அகற்றி வருகிறார்கள்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் படி, நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டி உள்ள மசினகுடி மற்றும் பொக்காபுரம் பகுதிகளில் யானை வழித்தடங்களில் கட்டப்பட்டு உள்ள கட்டிடங்களை அகற்ற நோட்டீசு வழங்கப்பட்டு வருகிறது. சோலூர் பேரூராட்சி மூலம் பொக்காபுரம் பகுதியில் உள்ள 23 கட்டிடம், மசினகுடி ஊராட்சி மூலம் மசினகுடியில் 12 கட்டிட உரிமையாளர்களுக்கும் சம்பந்தப்பட்ட பேரூராட்சி, ஊராட்சி உதவி இயக்குனர்கள் வழியாக நோட்டீசு வழங்கப்பட்டு வருகிறது.

தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் வீடு கட்டி இருப்பவர்கள் தண்ணீர் செல்லும் கால்வாய்களை சிறிதாக ஆக்காமல், உரிய அளவிலேயே கால்வாய் இருக்குமாறு பராமரிக்க வேண்டும் என்று சம்பந்தப் பட்ட நபர்களுக்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story