வீட்டில் தனியாக இருந்த தாய்–மகளை தாக்கி கொள்ளையடித்த 3 பேர் கைது


வீட்டில் தனியாக இருந்த  தாய்–மகளை தாக்கி கொள்ளையடித்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 12 Oct 2017 4:30 AM IST (Updated: 12 Oct 2017 1:53 AM IST)
t-max-icont-min-icon

வீட்டில் தனியாக இருந்த தாய், மகளை தாக்கி நகை, பணத்தை கொள்ளையடித்த சம்பவத்தில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். நகை ஆசையில் கூட்டாளிகளை ஏவி தோழியே இந்த கைவரிசையில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.

புதுச்சேரி,

புதுச்சேரி முதலியார்பேட்டை வைத்திலிங்கம் செட்டியார் தெருவைச் சேர்ந்தவர் முருகன்(வயது 38). இவருடைய மனைவி சாமூண்டீஸ்வரி (வயது 28). முருகன் பிரான்ஸ் நாட்டில் வேலைபார்த்து வருகிறார். இதனால் தனது 2 குழந்தைகள், தாய் மாலா ஆகியோருடன் சாமூண்டீஸ்வரி வசித்து வந்தார். கடந்த 5–ந் தேதி குழந்தைகளை டியூசனுக்கு அனுப்பி விட்டு இரவு 7 மணியளவில் சாமூண்டீஸ்வரி, தனது தாயாருடன் டி.வி. பார்த்துக்கொண்டு இருந்தார்.

அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் முகமூடி அணிந்தபடி வந்த 4 பேர் சாமூண்டீஸ்வரியின் வீட்டிற்குள் புகுந்தனர். அவர்கள் சாமூண்டீஸ்வரி மற்றும் அவரது தாயார் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவர்கள் அணிந்திருந்த 13 பவுன் நகைகள், பீரோவில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 24 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றனர்.

அடையாளம் தெரிந்தது

இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அப்போது கொள்ளை நடந்த வீட்டின் அருகே உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். இதன் மூலம் சாமூண்டீஸ்வரி வீட்டிற்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 முகமூடி கொள்ளையர்களை போலீசார் அடையாளம் கண்டனர்.

இதைத்தொடர்ந்து சாமூண்டீஸ்வரியின் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்பவர்கள் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது சாமுண்டீஸ்வரியின் தோழியான கோட்டக்குப்பத்தை சேர்ந்த மணிமேகலை என்பவர் அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.

தோழி சிக்கினார்

விசாரணையில் அவர் தனக்கு தெரிந்தவர்களை ஏவி சாமூண்டிஸ்வரியின் வீட்டில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார். மேலும் சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் மணிமேகலை அவர் அணிந்திருக்கும் நகைகளை பார்த்து பொறாமை அடைந்ததுடன் அதனை அடைய திட்டம் தீட்டியது தெரியவந்தது. இதனால் அந்த நகைகளை கொள்ளையடிப்பது என அவர் முடிவு செய்தார். இந்த முயற்சியில் நேரடியாக ஈடுபட்டால் மாட்டிக்கொள்வோம் என கருதிய அவர் தனக்கு தெரிந்த முத்தியால்பேட்டை அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த கோகுல்நாத்(20), குருசுக்குப்பத்தை சேர்ந்த ஹரிஹரன்(20) உள்பட 4 பேரிடம் இதுகுறித்து மணிமேகலை தெரிவித்துள்ளார். இதனைதொடர்ந்து அவர்கள் கொள்ளையடிப்பது குறித்து திட்டமிட்டுள்ளனர். இதன்பிறகு வாலிபர்கள் 4 பேரும் சேர்ந்து சாமூண்டீஸ்வரியின் வீட்டிற்கு சென்று பணம், நகையை கொள்ளையடித்துள்ளனர்.

3பேர் கைது

இதுதொடர்பாக மணிமேகலையை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை தேடி வந்த நிலையில் கோகுல்நாத், ஹரிஹரன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 9 பவுன் நகை மற்றும் ரூ. 94 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். குற்றவாளிகளை கைது செய்த போலீசாருக்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ் ரஞ்சன் வாழ்த்து தெரிவித்தார்.


Next Story