சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதும் சித்தராமையா மீண்டும் முதல்–மந்திரி ஆக முடியாது


சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதும் சித்தராமையா மீண்டும் முதல்–மந்திரி ஆக முடியாது
x
தினத்தந்தி 28 Oct 2017 9:30 PM GMT (Updated: 28 Oct 2017 8:00 PM GMT)

சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதும் சித்தராமையா மீண்டும் முதல்–மந்திரியாக ஆக முடியாது என்று மாநில தலைவர் பரமேஸ்வர் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதும் சித்தராமையா மீண்டும் முதல்–மந்திரியாக ஆக முடியாது என்று மாநில தலைவர் பரமேஸ்வர் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் நேற்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

சட்டத்தை பற்றி தெரியவில்லை

போலீஸ் அதிகாரி கணபதி தற்கொலையில், கே.ஜே.ஜார்ஜ் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி சி.பி.ஐ. அதிகாரிகள் தங்களது விசாரணையை தொடங்கியுள்ளனர். மந்திரி கே.ஜே.ஜார்ஜ் மீது புதிதாக வழக்கு எதையும் சி.பி.ஐ. பதிவு செய்யவில்லை. கணபதி தற்கொலை குறித்து ஏற்கனவே குடகு மாவட்டம் குஷால்நகர் போலீசார் பதிவு செய்திருந்த வழக்கு தான், சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுள்ளது.

ஆனால் மந்திரி கே.ஜே.ஜார்ஜ் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்திருப்பதாக பா.ஜனதாவினர் கூறுகிறார்கள். பா.ஜனதாவினருக்கு சட்டத்தை பற்றி எதுவும் தெரியவில்லை. அரசியல் காரணங்களுக்காக மந்திரி பதவியை கே.ஜே.ஜார்ஜ் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பா.ஜனதாவினர் கூறி வருகின்றனர்.

மோடி அலை வீச வாய்ப்பில்லை

கடந்த 2013–ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி இருந்த நிலையை விட தற்போது பல மடங்கு சிறப்பான நிலையில் இருக்கிறது. ஏனெனில் காங்கிரஸ் அரசு சிறப்பாக ஆட்சி செய்து வருகிறது. இதனால் மக்களிடையே செல்வாக்கு அதிகரித்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல்வேறு திட்டங்களால் 4½ கோடி மக்கள் பயன் அடைந்து வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் 35 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

அடுத்த ஆண்டு(2018) நடைபெறும் கர்நாடக சட்டசபை தேர்தலில் மோடி அலை வீச வாய்ப்பில்லை. மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சியால் நாட்டு மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமாகி விட்டது. இதனால் பிரதமர் மோடிக்கு எதிராக தான் மக்கள் இருந்து வருகிறார்கள்.

முதல்–மந்திரி ஆக முடியாது

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிப்பது உறுதி. முதல்–மந்திரி சித்தராமையா தலைமையில் சட்டசபை தேர்தலை காங்கிரஸ் சந்திக்கும். காங்கிரஸ் வெற்றி பெற்றால் மீண்டும் சித்தராமையா முதல்–மந்திரியாக ஆகி விடுவார் என்று நீங்கள் (நிருபர்கள்) கேட்கிறீர்கள். காங்கிரஸ் வெற்றி பெற்றதும் சித்தராமையா தானாகவே முதல்–மந்திரியாக ஆக முடியாது. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கூட்டப்படும். அவர்கள் தான் அடுத்த முதல்–மந்திரியை தேர்ந்தெடுப்பார்கள். கட்சி மேலிடமும் யாரை முதல்–மந்திரியாக நியமிக்கலாம் என்று ஆலோசித்து முடிவு எடுக்கும்.

எனக்கு முதல்–மந்திரியாகும் எல்லா தகுதிகளும் இருக்கிறது. ஆனால் முதல்–மந்திரி பதவிக்கு நான் போட்டியிடவில்லை. சட்டசபை தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மாநில தலைவராக இருந்து எடுத்து வருகிறேன்.

இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.


Next Story