திருவந்திபுரம் மலையில் கிராவல் மண் குவாரியை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்


திருவந்திபுரம் மலையில் கிராவல் மண் குவாரியை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 28 Oct 2017 10:45 PM GMT (Updated: 28 Oct 2017 8:22 PM GMT)

திருவந்திபுரம் மலையில் கிராவல் மண் ஏற்றிச்சென்ற லாரிகளை கிராம மக்கள் சிறைபிடித்தனர். நிர்ணயிக்கப்பட்டதைவிட அதிகளவு கிராவல் மண் அள்ளப்படுவதாக புகார் தெரிவித்தனர்.

நெல்லிக்குப்பம்,

கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் 108 வைணவ தலங்களில் ஒன்றான தேவநாதசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் எதிரே உள்ள அவுசதகிரி மலையில் ஹயக்கிரீவர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பின்புற பகுதியில் 100 ஏக்கருக்கும் மேல் விளைநிலங்கள் உள்ளது. இதில் அந்த கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் உளுந்து உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ளனர்.

மேலும் அந்த மலையில் தனியார் கிராவல் மண் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் இருந்து பொக்லைன் எந்திரங்கள் மூலம் கிராவல் மண் அள்ளப்பட்டு, லாரிகளில் மூலம் பல இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம்போல் பொக்லைன் எந்திரங்கள் மூலம் கிராவல் மண் அள்ளப்பட்டு லாரிகளில் ஏற்றப்பட்டது. அப்போது திருவந்திபுரம் கிராம மக்கள் ஒன்று திரண்டு, அந்த குவாரிக்கு சென்றனர். பின்னர் அவர்கள் திடீரென குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கிராவல் மண் ஏற்றிக்கொண்டு புறப்பட்ட லாரிகளையும் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். அப்போது லாரி டிரைவர்கள், கிராம மக்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து கிராம மக்கள் கடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கிராம நிர்வாக அலுவலருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். உடனே சுதாரித்துக்கொண்ட டிரைவர்கள் லாரியை எடுத்துக்கொண்டு வேகமாக சென்று விட்டனர்.

இதனை தொடர்ந்து திருவந்திபுரம் கிராம நிர்வாக அலுவலரிடம், கிராம மக்கள் புகார் கொடுத்தனர். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:–

திருவந்திபுரம் மலையில் கிராவல் மண் குவாரி உள்ளது. இங்கு 3 அடி வரை மட்டுமே மண் அள்ள அரசு அனுமதித்துள்ளது. ஆனால் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட 30 அடி ஆழம் வரை கிராவல் மண் அள்ளப்படுகிறது. இதனால் அருகில் உள்ள விளைநிலங்கள் பாதிக்கப்படுகிறது. மண் சரிவு ஏற்படுகிறது. பிரசித்திபெற்ற ஹயக்கிரீவர் கோவில் அருகே கிராவல் மண் அள்ளுவதால், கோவிலுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு அளித்த அனுமதியை மீறி கிராவல் மண் அள்ளுவதை தடுத்து நிறுத்த வேண்டும். அந்த குவாரி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story