பாதி விலைக்கு வாகனங்கள் வாங்கி தருவதாக மோசடி: தனியார் நிறுவன உரிமையாளர் கைது


பாதி விலைக்கு வாகனங்கள் வாங்கி தருவதாக மோசடி: தனியார் நிறுவன உரிமையாளர் கைது
x
தினத்தந்தி 28 Oct 2017 10:15 PM GMT (Updated: 28 Oct 2017 8:47 PM GMT)

சேலத்தில் பாதி விலைக்கு வாகனங்கள் வாங்கி தருவதாக மோசடி செய்தது தொடர்பான வழக்கில் தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

சேலம்,

சேலம் புதிய பஸ்நிலையம் அருகே மற்றும் நாமக்கல்லில் செயல்பட்டுவரும் ஒரு தனியார் மார்க்கெட்டிங் நிறுவனம் உள்ளூர் தொலைக்காட்சியில், வாகனங்களை பாதி விலைக்கு வாங்கி கொள்ளலாம் என விளம்பரம் செய்தது. அதை பார்த்து ஏராளமானோர் மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களை வாங்கினார்கள்.

பின்னர் அந்த நிறுவனத்தினர் வாகனங்களுக்கு மீதி தொகையை சரியாக கட்டவில்லை. இதனால் வாகனங்கள் வாங்கியவர்களிடம் பணத்தை கட்டவில்லை என்றால் பறிமுதல் செய்யப்படும் என ஷோரூம் நிர்வாகிகள் தெரிவித்தனர். அப்போதுதான் தனியார் நிறுவனத்தினர் லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்திருப்பது வாடிக்கையாளர்களுக்கு தெரியவந்தது. இதனால் அவர்கள் சேலத்தில் உள்ள அலுவலகத்திற்கு சென்று அங்குள்ள பொருட்களை அடித்து நொறுக்கினர்.

மேலும், இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் மாநகர போலீஸ் கமி‌ஷனர் சங்கரிடம் புகார் கொடுத்தனர். இந்த மோசடி தொடர்பாக தனியார் நிறுவனத்தின் உரிமையாளரும், மேலாளருமான அம்மாபேட்டையை சேர்ந்த கோபிநாத் (வயது 36), உதவி மேலாளர்கள் மல்லிகா, சமீனா ஆகியோர் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் மரியமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

இந்தநிலையில் நேற்று கோபிநாத்தை போலீசார் கைது செய்தனர். மேலும் மல்லிகா, சமீனா ஆகியோரை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.


Next Story