இலங்கை கடற்படை தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும், மீனவர்கள் கோரிக்கை
இலங்கை கடற்படை தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமேசுவரம்,
தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு சிறைபிடிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஆகஸ்டு மாதம் 31–ந்தேதி முதல் இதுவரை ராமேசுவரத்தை சேர்ந்த 29 பேர், மண்டபத்தை சேர்ந்த 8 பேர், நாகபட்டினத்தை சேர்ந்த 12 பேர், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 26 பேர், காரைக்காலை சேர்ந்த 10 பேர் என மொத்தம் 85 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்த தீர்வு காண இருநாட்டு அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும், இலங்கை கடற்படை தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று ராமேசுவரம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மீனவர்கள் சார்பில் நிரபராதி மீனவர் கூட்டமைப்பு தலைவர் அருளானந்தம் கூறியதாவது:– இருநாட்டு மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் இந்திய அரசும், இலங்கை அரசும் அவ்வப்போது அதிகாரிகள் மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறது. மேலும் இருநாட்டு மீனவர்கள் சார்பிலும் கூட்டங்கள் நடத்தப்பட்டுஉள்ளன. இதனால் எவ்வித பயனும் இல்லை. தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்களையும், படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து செல்வது வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. இலங்கை கடற்படையினர் இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீனவர்களை கைது செய்வதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன.
இதுகுறித்து மண்டபம் மற்றும் சென்னையில் உள்ள இந்திய கடலோர காவல்படை அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுஉள்ளது. இந்த பிரச்சினையில் மத்திய அரசு தொடர்ந்து மவுனம் காத்து வருவது மீனவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசு இதுதொடர்பாக இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி படகுகளையும், மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆழ்கடல் மீன்பிடிப்பு திட்டம் தொடங்கும் வகையில் மீனவர்கள் நிம்மதியாக இலங்கை கடற்படையினரின் தொல்லையில்லாமல் மீன்பிடிக்க மத்திய–மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.