அகில இந்திய தலைவராக ராகுல்காந்தியை தேர்வு செய்ய புதுவை காங்கிரஸ் ஆதரவு


அகில இந்திய தலைவராக ராகுல்காந்தியை தேர்வு செய்ய புதுவை காங்கிரஸ் ஆதரவு
x
தினத்தந்தி 30 Nov 2017 12:15 AM GMT (Updated: 29 Nov 2017 8:47 PM GMT)

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக ராகுல்காந்தியை தேர்வு செய்ய புதுவை காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

புதுச்சேரி,

காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் புதுவை காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு பிரதேச காங்கிரஸ் கட்சி தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் தேர்தல் பொறுப்பாளர் ஜக்மோகன் சிங்க் காங்க், துணை தேர்தல் பொறுப்பாளர் பென்னி, முதல்–அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாநில துணைத்தலைவர்கள், பிரதேச காங்கிரஸ் உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் துணைத்தலைவர் ராகுல்காந்தியை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக தேர்வு செய்ய புதுவை பிரதேச காங்கிரஸ் கமிட்டி ஏகோபித்த ஆதரவினை ஏகமனதாக தெரிவித்துக்கொள்கிறது.

தேச ஒற்றுமையை காத்திடவும், நாடு நலம் பெறவும், காங்கிரஸ் தலைமையிலான அரசு மத்தியில் மீண்டும் மலரவும், இந்திய நாடு ஏற்றமிகு வளர்ச்சி பெறவும் ராகுல்காந்தி தலைமையேற்று வழிநடத்திட நாடெங்கும் உள்ள கட்சி பொறுப்பாளர்களும், தொண்டர்களும் ராகுல்காந்தியை ஏகமனதாக தேர்ந்தெடுப்பதற்கு ஆதரவு அளிக்க புதுவை பிரதேச காங்கிரஸ் அனைவரையும் வேண்டுகிறது.

மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story