புதுவையில் ரூ.16 கோடி மதிப்புள்ள நிலம் மோசடி 4 பேர் கைது; போலீசார் அதிரடி


புதுவையில் ரூ.16 கோடி மதிப்புள்ள நிலம் மோசடி 4 பேர் கைது; போலீசார் அதிரடி
x
தினத்தந்தி 29 Dec 2017 11:27 PM GMT (Updated: 29 Dec 2017 11:27 PM GMT)

புதுவையில் போலி பத்திரம் தயாரித்து முன்னாள் பிரெஞ்சு தூதரக அதிகாரிக்கு சொந்தமான ரூ.16 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி,

புதுச்சேரியை சேர்ந்தவர் ஜூலியன் (வயது74). முன்னாள் பிரெஞ்சு தூதரக அதிகாரி. ஒயிட் டவுன் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பூர்வீக நிலம் பிரான்சுவா மார்த்தேன் வீதியில் உள்ளது. இதன்மதிப்பு ரூ.16 கோடி என்று கூறப்படுகிறது. இந்த நிலத்தை சிலர் போலி பத்திரம் தயாரித்து ஆக்கிரமிக்க முயன்றனர்.

இதுபற்றி தெரியவந்ததை தொடர்ந்து ஜூலியன் பத்திரப்பதிவு துறை அதிகாரிகளின் உதவியை நாடினார். ஆனால் அவர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது. இதைத்தொடர்ந்து இந்த மோசடி முயற்சி குறித்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஜூலியன் தெரிவித்தார். இதுகுறித்து விசாரித்து உடனே நடவடிக்கை எடுக்குமாறு பெரியகடை போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார்.

அதன்பேரில் கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) குணசேகரன் தலைமையில் பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், சப்–இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் ஜூலியனுக்கு சொந்தமான நிலத்தை போலி பத்திரம் தயாரித்து புதுவை நெல்லித்தோப்பு கிருஷ்ணமூர்த்தி (65), அவ்வை நகர் பாமா பரமேஸ்வரி (40), முத்தியால்பேட்டை அலெக்சென்டர் ஜோசப் (47), புதுவையை அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பம் தென்னந்தோப்பு பகுதியை சேர்ந்த சீனுலோகநாதன் ஆகியோர் மோசடி செய்ய முயன்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலமோசடி விவகாரத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட பெரியகடை போலீசாரை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ் ரஞ்சன் பாராட்டினார்.


Next Story