தமிழக அரசின் ஊழல்களை விசாரிக்க ஆணையம் அமைக்க வேண்டும் பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்


தமிழக அரசின் ஊழல்களை விசாரிக்க ஆணையம் அமைக்க வேண்டும் பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 30 Dec 2017 11:15 PM GMT (Updated: 30 Dec 2017 6:27 PM GMT)

தமிழக அரசின் ஊழல்களை விசாரிக்க ஆணையம் அமைக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மதுரை,

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ‘‘2017–க்கு விடை கொடுப்போம், 2018–ஐ வரவேற்போம்’’ என்ற தலைப்பில் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் மதுரை கூடல்நகர் அருகில் உள்ள சிக்கந்தர்சாவடியில் நேற்று நடந்தது. மாநில தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:–

கடந்த 1989–ம் ஆண்டு தொடங்கிய பா.ம.க. தமிழக மக்களின் உரிமைகளுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. தமிழகத்தில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. பாராளுமன்றம் முதல் பஞ்சாயத்து தேர்தல் வரை அனைத்திலும் பாட்டாளி மக்கள் கட்சி தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும். ஆர்.கே.நகரில் பணநாயகம் வென்றுள்ளதை நாம் பார்க்க முடிகிறது. தேர்தல் ஆணையத்தால் இதை தடுக்க முடியாதது வேதனைக்குரிய ஒன்றாக உள்ளது. ஆர்.கே.நகர் வாக்காளர்கள் பணத்திற்கு அடிமையாகிவிட்டார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது.

கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களை விட தமிழகம் மிகவும் பின்தங்கிய மாநிலமாக உள்ளது. நீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டால் மட்டுமே விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும். தண்ணீருக்காக மற்ற மாநிலங்களை நம்பி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பா.ம.க. ஆட்சி அமைந்தவுடன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள், ஊழல் இல்லாத ஆட்சி, சுகாதார மேம்பாடு, அனைவருக்கும் இலவச கல்வி, மருத்துவம் என பல திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

தமிழகத்தில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அப்போதைய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் அடிக்கல் நாட்டினார். ஆனால் தற்போது தமிழக அரசின் மெத்தனத்தால் அந்த திட்டம் தமிழகத்திற்கு வருமா என்ற சந்தேகம் வந்துவிட்டது. எனவே தமிழக அரசு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:–

தமிழக அரசின் மீது 24 குற்றச்சாட்டுகள் அடங்கிய 206 பக்கங்கள் கொண்ட புகார் மனுவை கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம், அன்புமணி ராமதாஸ் வழங்கி உள்ளார். அப்போது இந்த புகார்கள் குறித்து விசாரணை நடத்த ஆய்வு செய்யப்படும் என்று கவர்னர் உறுதி அளித்தார். எனவே தமிழக அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க பணியில் உள்ள அல்லது ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.

தேர்தலில் பணம் கொடுத்தால் வெற்றி பெற்று விடலாம் என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது. அதற்கு சிறந்த உதாரணம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல். இந்த தேர்தல் முடிவு, ஜனநாயகத்தின் வளர்ச்சிக்கு எந்த உதவியும் செய்யாது. எனவே வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அதற்கான தேர்தல் சீர்திருத்தத்தை கொண்டுவர வேண்டும்.

உள்ளாட்சி தேர்தலை வருகிற மார்ச் மாதத்திற்குள் நடத்திட வேண்டும். ஒகி புயலால் காணாமல் போன மீனவர்களை இறந்தவர்களாக அறிவிக்க வேண்டும். அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

சம்பா பயிரை காக்க மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் நீர் திறக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். போக்குவரத்து கழகங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.

முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். 2018–ம் ஆண்டை இளைஞர்கள் எழுச்சி ஆண்டாக கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story