அந்தியூர் அருகே ரே‌ஷன் அரிசி பதுக்கி வைத்தவர் குண்டர் சட்டத்தில் கைது


அந்தியூர் அருகே ரே‌ஷன் அரிசி பதுக்கி வைத்தவர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 30 Dec 2017 9:45 PM GMT (Updated: 30 Dec 2017 6:59 PM GMT)

அந்தியூர் அருகே ரே‌ஷன் அரிசி பதுக்கி வைத்தவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு,

அந்தியூர் அருகே அம்மன்பாளையம் பகுதியில் ரே‌ஷன் அரிசி பதுக்கி வைத்து இருப்பதாக ஈரோடு உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடந்த மாதம் 23–ந் தேதி போலீசார் அம்மன்பாளையம் சாணார்தோட்டம் பகுதியில் திடீர் சோதனை நடத்தியபோது 16 டன் ரே‌ஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த ரே‌ஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், அந்த பகுதியை சேர்ந்த காஜா என்கிற காஜாமொய்தீன், சிந்தகவுண்டன்பாளையம் எட்டிக்குட்டைபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் (வயது 32) ஆகியோர் தங்களது கூட்டாளிகளுடன் சேர்ந்து கர்நாடகா மாநிலத்திற்கு கடத்துவதற்காக ரே‌ஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காஜாமொய்தீனை கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடையவர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இந்தநிலையில் கவுந்தப்பாடி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருந்த பிரகாசை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஈரோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார். கைதான பிரகாஷ் மீது ஏற்கனவே ரே‌ஷன் அரிசி கடத்தியதற்காக பல்வேறு வழக்குகள் உள்ளதால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகருக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி பரிந்துரை செய்தார். அதன்பேரில் பிரகாசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் எஸ்.பிரபாகர் உத்தரவிட்டார். அவருடைய உத்தரவின்படி ஈரோடு கிளைச்சிறையில் அடைக்கப்பட்டு இருந்த பிரகாசை போலீசார் நேற்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர். காஜாமொய்தீனும் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story