ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்ற எதிர்ப்பு: பொக்லைன் எந்திரம் முன்பு படுத்து பொது மக்கள் போராட்டம்


ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்ற எதிர்ப்பு: பொக்லைன் எந்திரம் முன்பு படுத்து பொது மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 30 Dec 2017 10:00 PM GMT (Updated: 30 Dec 2017 8:30 PM GMT)

ஸ்ரீமுஷ்ணம் அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்றும் பணியின் போது பொக்லைன் எந்திரம் முன்பும் சாலையில் பொது மக்கள் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீமுஷ்ணம்,

ஸ்ரீமுஷ்ணம் எம்.ஜி.ஆர். நகர் மலைமேடு பகுதியில் ஆண்டிமடம் செல்லும் சாலையில் 50–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 30 ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வருகின்றனர். இவர்கள் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மலைமேடு பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்றிவிட்டு அங்கு ஸ்ரீமுஷ்ணம் தாலுகா அலுவலகத்துக்கு புதிதாக கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

இதற்காக அங்குள்ள வீடுகளை காலி செய்ய வேண்டும் என அந்த பகுதி மக்களிடம் தாசில்தார் கூறினார். மேலும் ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ள 46 பேருக்கு இதுவரை 2 முறை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் மலைமேடு பொதுமக்கள் வீடுகளை காலி செய்யவில்லை.

இதற்கிடையே ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஆக்கிரமிப்பாளர்கள் கடந்த 21–ந் தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தினர். அப்போது, பல ஆண்டுகளாக வசித்து வருவதால் மாற்று இடம் வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதற்கு சேத்தாம்பட்டு ஊராட்சியில் மாற்று இடம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றனர். இதை கேட்ட மக்கள், மாற்று இடம் வழங்கும் இடத்தில் சாலை, குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் எங்களுக்கு செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதை ஏற்ற ஆக்கிரமிப்பாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்த நிலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை இடிக்க 3 பொக்லைன் எந்திரங்களுடன் தாசில்தார் அந்தோணிராஜ், துணை தாசில்தார் அருள்பிரகாசம், வருவாய் ஆய்வாளர் சாந்தி, ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பீர்பாட்ஷா மற்றும் போலீசார், வருவாய்த்துறை ஊழியர்கள் நேற்று காலை 8 மணிக்கு மலைமேடு பகுதிக்கு வந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆக்கிரமிப்பாளர்கள், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்று திரண்டனர். மேலும், ஆக்கிரமிப்புகளை அகற்றக்கூடாது என்று கூறி கோ‌ஷங்களை எழுப்பினர்.

இது குறித்து தகவல் அறிந்த சிதம்பரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். பின்னர், அவர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை முடுக்கிவிடும் விதமாக சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு நிஷா தலைமையில் 50–க்கும் மேற்பட்ட போலீசாரை பாதுகாப்பு பணிக்காக சம்பவ இடத்திற்கு வரவழைத்தார். தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் வீடுகளை இடிக்க ஊழியர்களை அறிவுறுத்தினார். அதன்படி, பொக்லைன் எந்திரத்தை அதன் டிரைவர் இயக்கி, வீடுகளை இடிக்க முயன்றார்.

இதில் ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் அவரவர் வீடுகளுக்குள் சென்று அமர்ந்தனர். எங்களை வைத்து வீடுகளை இடியுங்கள் என்று கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிலர் பொக்லைன் எந்திரத்தின் முன்பு படுத்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தடுத்து கோ‌ஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை நிறுத்தி, அதிகாரிகள் அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் வருகிற 6–ந் தேதிக்குள் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை 46 குடும்பத்தினரும் காலி செய்ய வேண்டும். ஓரிரு நாட்களுக்குள் இங்குள்ளவர்களுக்கு மாற்று இடமாக சேத்தாம்பட்டு ஊராட்சியில் இடம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. இதனை ஏற்ற மக்கள் தங்களின் போராட்டத்தை கைவிட்டனர். மேலும், அதிகாரிகளும் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

ஸ்ரீமுஷ்ணம் அருகே மலைமேடு பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 46 வீடுகளை வருவாய்த்துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்க முயன்றனர். அப்போது, அங்குள்ள பெண்கள் பலர் கதறி அழுது ஒப்பாரி வைத்தனர். சிலர் அதிகாரிகள், போலீசாரிடம் ஆவேசமாக பேசி வாக்குவாதம் செய்தனர். இந்த நிலையில், ஆவேசமாக பேசிய ஒரு பெண், திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story