ஆதரவற்ற முதியோருக்காக நாளை முதல் சிறப்பு முகாம் தொடக்கம் கலெக்டர் தகவல்


ஆதரவற்ற முதியோருக்காக நாளை முதல் சிறப்பு முகாம் தொடக்கம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 30 Dec 2017 11:00 PM GMT (Updated: 30 Dec 2017 8:52 PM GMT)

சேலம் மாவட்டத்தில் ஆதரவற்ற முதியோருக்காக நாளை முதல் சிறப்பு முகாம் தொடங்கி நடைபெறும் என கலெக்டர் ரோகிணி தெரிவித்தார்.

சேலம்,

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ஆதரவற்ற முதியோரை கண்டறிதல் மற்றும் மறுவாழ்வு முனைப்பு இயக்கம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கி பேசியதாவது:-

சமூக நலத்துறை மூலம் ஆதரவற்ற முதியோர்களை கண்டறிந்து அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் “தாத்தா பாட்டி வீட்டுக்கு வாங்க” என்ற தலைப்பில் வருகிற 1-ந் தேதி(நாளை) முதல் 10-ந் தேதி வரை சிறப்பு முகாம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதியிலும் நடைபெறவுள்ளது.

மூத்த குடிமக்களை பாதுகாக்கும் வகையில் முதியோருக்கான இல்லங்கள் ஒருங்கிணைப்பு வளாகங்கள் மற்றும் முதியோர் நலன் காக்கும் சட்டங்கள் சமூக நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் தங்களில் இயல்பு வாழ்க்கைக்கான பராமரிப்புத் தொகை பெற தகுதியுடையவர் ஆகிறார்கள்.

தகுதியுடையவர்கள் மாவட்ட சமூக நல அலுவலரிடம் பராமரிப்பு தொகை வேண்டி விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு சேலம் கலெக்டர் அலுவலக முதல் தள அறை எண். 126-ல் செயல்பட்டுவரும் மாவட்ட சமூக நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் பேசினார். கூட்டத்தில் மாவட்ட சமூக நல அலுவலர் பரிமளாதேவி, முதியோர் இல்லங்களின் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சேலம் குகை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நிறைவு நாள் நிகழ்ச்சி கலெக்டர் ரோகிணி தலைமையில் நடைபெற்றது. தமிழ்மொழியில் கோப்புகளை பராமரிப்பது குறித்தும், மென்பொருள் குறித்தும் பயிற்சிகள் வழங்கப்பட்டது. ஆட்சிமொழித்திட்ட செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய மாவட்ட நூலக அலுவலகத்திற்கு கேடயத்தினையும், தமிழ்மொழியில் கோப்புகளை சிறந்த முறையில் பராமரித்த ஓமலூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு காசோலைகளையும் கலெக்டர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் அன்புச்செழியன், மாவட்ட கல்வி அலுவலர் தங்கவேல், சேலம் மாநகர அனைத்து வணிகர்கள் பொதுச்செயலாளர் ஜெயசீலன், குகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பனிமேதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story