முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விடக்கோரி 6 இடங்களில் சாலை மறியல்


முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விடக்கோரி 6 இடங்களில் சாலை மறியல்
x
தினத்தந்தி 30 Dec 2017 10:45 PM GMT (Updated: 30 Dec 2017 9:36 PM GMT)

முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விடக்கோரி திருத்துறைப்பூண்டியில் நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 6 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, காவிரி டெல்டாவின் கடைமடை பகுதியாகும். மேட்டூர் அணையில் இருந்து உரிய நேரத்தில் தண்ணீர் திறந்தால் மட்டுமே இப்பகுதியில் விவசாயம் செய்ய முடியும். இந்த ஆண்டு உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படவில்லை. மழைநீரை பயன்படுத்தி விவசாயிகள் சம்பா சாகுபடியை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் தற்போது ஆற்றில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் திருத்துறைப்பூண்டி பகுதியில் சம்பா பயிர்கள் வாடி வருகின்றன. இந்த பயிர்களை காப்பாற்ற மேட்டூர் அணையில் இருந்து முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் திருத்துறைப்பூண்டியில் நேற்று 6 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் அருகே நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன் தலைமை தாங்கினார். தேசிய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் வையாபுரி, கட்சியின் நிர்வாகக்குழு உறுப்பினர் சந்திரராமன், ஒன்றிய செயலாளர் பாஸ்கர், நகர செயலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதேபோல ஆலத்தம்பாடி கடைத்தெருவில் கட்சியின் ஒன்றிய துணை செயலாளர் பாலு தலைமையிலும், நெடும்பலம் கடைத்தெருவில் கிளை செயலாளர் அம்பிகாபதி தலைமையிலும், விளக்குடி கடைத்தெருவில் விவசாய சங்க மாநிலக்குழு உறுப்பினர் உலகநாதன், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் குருமணி ஆகியோர் தலைமையிலும், பிச்சன்கோட்டகம் கடைத்தெருவில் முன்னாள் ஊராட்சி தலைவர் மகாலிங்கம் தலைமையிலும், பாமணி கடைத்தெருவில் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் மூர்த்தி தலைமையிலும் சாலை மறியல் நடந்தது.

பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் அறிந்த பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கண்ணையா, மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன், திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், வருவாய் ஆய்வாளர் பூபதி, கிராம நிர்வாக அதிகாரி சிங்காரவேலு ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் அருகே நடந்தது. இதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. சாலை மறியல் காரணமாக திருத்துறைப்பூண்டி பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story