விளாத்திகுளத்தில் அரிவாள் வெட்டில் காயம் அடைந்த தொழிலாளி சாவு கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை


விளாத்திகுளத்தில் அரிவாள் வெட்டில் காயம் அடைந்த தொழிலாளி சாவு கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 30 May 2018 8:30 PM GMT (Updated: 30 May 2018 2:38 PM GMT)

விளாத்திகுளத்தில் அரிவாள் வெட்டில் காயம் அடைந்த தொழிலாளி சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இதையடுத்து இந்த வழக்கை, கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்ற

விளாத்திகுளம், 

விளாத்திகுளத்தில் அரிவாள் வெட்டில் காயம் அடைந்த தொழிலாளி சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இதையடுத்து இந்த வழக்கை, கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரிவாள் வெட்டு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சாலையம் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி மகன் மாரிமுத்து (வயது 28). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு இவர் ஊருக்கு வந்திருந்தார்.

சம்பவத்தன்று இவர், சத்தியாநகரை சேர்ந்த மந்திரமூர்த்தி மகன் சுயம்புலிங்கம் (21), சாலையம் தெருவை சேர்ந்த கார்த்திகேயன் மகன் சதீஷ்குமார் (27) ஆகியோருடன் சாலையம் தெருவில் உள்ள ஒரு கோவில் அருகே மதுபோதையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு நடந்த பிரச்சினையில் மாரிமுத்து, சுயம்புலிங்கத்தை தாக்கியதில் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்து உள்ளது. இது தொடர்பாக அப்போது மாரிமுத்துவுக்கும் சுயம்புலிங்கத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் சுயம்புலிங்கம், சதீஷ்குமார் ஆகிய 2 பேரும் சேர்ந்து அரிவாளால் மாரிமுத்துவை சரமாரியாக வெட்டினர்.

ஆஸ்பத்திரியில் சாவு

ரத்த வெள்ளத்தில் கிடந்த மாரிமுத்துவை அக்கம் பக்கத்தினர் மீட்டு விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுயம்புலிங்கம், சதீஷ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அந்த 2பேரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்தநிலையில் மாரிமுத்து சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவில் இறந்தார். இதையடுத்து சுயம்புலிங்கம், சதீஷ்குமார் மீதான வழக்கை, விளாத்திகுளம் போலீசார் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர்.


Next Story