இரவு நேரங்களில் சுற்றித்திரிந்த ஆந்திர மாநில தொழிலாளர்கள் போலீசார் பிடித்து விசாரணை


இரவு நேரங்களில் சுற்றித்திரிந்த ஆந்திர மாநில தொழிலாளர்கள் போலீசார் பிடித்து விசாரணை
x
தினத்தந்தி 30 May 2018 11:00 PM GMT (Updated: 30 May 2018 7:13 PM GMT)

கறம்பக்குடி அருகே இரவு நேரங்களில் காட்டுப்பகுதியில் சுற்றித் திரிந்த ஆந்திர தொழிலாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கறம்பக்குடி,

கறம்பக்குடி அருகே உள்ள மழையூர் பகுதியில் விவசாய மின்மோட்டார்கள் மற்றும் கேபிள் ஒயர்கள் அடிக்கடி திருட்டுபோவதாக மழையூர் போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

மேலும் கடந்த சில நாட்களாக மழையூர், வெள்ளாளக்கொல்லை, அபிரான்விடுதி, கருப்பட்டிபட்டி உள்ளிட்ட கிராம பகுதிகளில் இரவு நேரங்களில் வேறுமொழி பேசும் சிலர் சுற்றித் திரிவதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து மழையூர் போலீசார் நேற்று முன்தினம் இரவு அப்பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அந்த கிராமப்பகுதியில் உள்ள காட்டிற்குள் நின்று கொண்டிருந்த 6 பேரை போலீசார் பிடித்து மழையூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் ஆந்திர மாநிலத்தில் உள்ள லாலா காலனி பகுதியை சேர்ந்த கோபேஸ்ராவ் (வயது 36), சுங்கையா (27), சுப்பையா (28), அஞ்சுரெட்டி (20), சிரினு (21), நாகராசு (20) என்பதும், அவர்கள் கறம்பக்குடி கருப்பர் கோவில் அருகே தங்களது குடும்பத்தினருடன் தங்கி பொம்மைகளை விற்பனை செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.

மேலும் உணவிற்காக உடும்பு, அணில், பறவைகளை வேட்டையாடுவதற்காகவே மழையூர் பகுதி கிராமங்களுக்கு வந்து சென்றதாகவும் கூறினர். ஆனால் அவர்களிடம் வேட்டையாடுவதற்கான எந்த பொருட்களும் இல்லை. மேலும் அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல் கூறினர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் 6 பேரையும் மேல்விசாரணைக்காக புதுக்கோட்டை மாவட்ட உதவி கலெக்டர் கே.எம்.சரயுவிடம் ஒப்படைத்தனர். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அவர்களிடமிருந்த 3 மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனார். 

Next Story