மாவட்ட செய்திகள்

கோவை வழியாக கேரளாவுக்கு 220 கிலோ கஞ்சா கடத்த முயன்ற 3 பேர் கைது + "||" + Three people arrested for attempting to smuggle kanja through Coimbatore

கோவை வழியாக கேரளாவுக்கு 220 கிலோ கஞ்சா கடத்த முயன்ற 3 பேர் கைது

கோவை வழியாக கேரளாவுக்கு 220 கிலோ கஞ்சா கடத்த முயன்ற 3 பேர் கைது
கோவை வழியாக கேரளாவுக்கு 220 கிலோ கஞ்சாவை சொகுசு காரில் கடத்த முயன்ற வடமாநில பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து சொகுசு கார், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கணபதி,

கோவையில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தலை தடுக்க போதைப் பொருள் தடுப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு வின்சென்ட், இன்ஸ்பெக்டர் மணிவர்மன் தலைமையில் 10 பேர் கொண்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினர் கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் வாகனங்களை சோதனை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கோவை நீலாம்பூர் பைபாஸ் சாலையில் தனியார் மில் அருகே தனிப்படையினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது, வேகமாக வந்த சொகுசு கார் ஒன்றை போலீசார் தடுத்து நிறுத்தினர். அந்த காரை சோதனையிட்டு உள்ளே பார்த்த போது 8 வெள்ளை நிற சாக்கு மூட்டைகள் இருந்தன. இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த திறந்து பார்த்த போது கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது.

உடனே காரில் ஒரு இளம்பெண் மற்றும் 2 வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில், அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சிவராஜ்நாயக் (வயது27), சம்பத் பஞ்சாரா(28), மற்றும் லக்மி சர்ஹாரா(27) என்பதும், ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னை, சேலம் வந்து கோவை வழியாக கேரள மாநிலம் மலப்புரத்திற்கு கஞ்சா மூட்டைகளை கடத்திக் கொண்டு செல்ல முயன்றதும் தெரியவந்துள்ளது.

மேலும் அவர்கள் வந்த காரின் பதிவு எண் போலி என்றும், அந்த எண் ஆந்திர மாநிலத்தில் பதிவான இருசக்கர வாகனத்தின் எண் என்பதும், உண்மையான பதிவு எண் மீது போலி பதிவு எண்னை ஒட்டி வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து விலையுயர்ந்த 3 செல்போன்கள், ரூ.10 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார், 220 கிலோ கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.50 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இளம்பெண்ணுடன் காரில் வந்தது ஏன்? என்று போலீசார் விசாரணை நடத்தியபோது, பெண் காரில் இருந்தால் போலீசார் சந்தேகப்படாமல் அனுப்பிவிடுவார்கள் என்றும் எளிதில் போதைப் பொருளை கடத்திவிடலாம் என்றும் முன்கூட்டியே திட்டமிட்டு வந்ததாக தெரிவித்தனர்.

இதையடுத்து போதைப்பொருள் தடுப்புச்சட்டத்தின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.