தொழில்அதிபர் மகன் கற்பழித்த சம்பவம்: கர்நாடக ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மனைவிக்கு தொடர்பு? - அதிகாரிகள் சோதனை


தொழில்அதிபர் மகன் கற்பழித்த சம்பவம்: கர்நாடக ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மனைவிக்கு தொடர்பு? - அதிகாரிகள் சோதனை
x
தினத்தந்தி 30 Jun 2018 9:58 PM GMT (Updated: 30 Jun 2018 9:58 PM GMT)

பெங்களூரு வீட்டில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனையால் பரபரப்பு நிலவியது.

பெங்களூரு,

கேரள மாணவியை காதலித்து தொழில்அதிபர் மகன் கற்பழித்த சம்பவத்தில் கர்நாடக ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மனைவிக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த ஒரு தம்பதியின் மகள் பெங்களூருவில் உள்ள கல்லூரியில் படித்தார். அப்போது அந்த மாணவிக்கும், பெங்களூருவை சேர்ந்த தொழில்அதிபரின் மகனுமான நஜீர்கான் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களது காதலுக்கும், திருமணத்திற்கும் 2 வீட்டு பெற்றோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அந்த மாணவியை கடந்த ஜனவரி மாதம் நஜீர்கான் மதம் மாற்றியதாகவும், மாணவியை அவர் கற்பழித்ததாகவும் கூறப்படுகிறது. அதன்பிறகு, அவர்கள் 2 பேரும் சவுதி அரேபியாவுக்கு சென்றார்கள்.

இதற்கிடையில், சவுதி அரேபியாவில் வைத்து மாணவியான இளம்பெண்ணை சில வசதி படைத்தவர்கள் கற்பழித்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக இளம்பெண் கொச்சியில் வசிக்கும் பெற்றோரிடம் கூறினார். இதுகுறித்து தேசிய புலனாய்வு அதிகாரிகளிடம் இளம்பெண்ணின் பெற்றோர் புகார் கொடுத்தார்கள். அதன்பேரில், அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சவுதி அரேபியாவில் இருந்து இந்தியாவுக்கு திரும்பிய நஜீர்கானையும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில், அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இளம்பெண் நஜீர்கானுடன் பெங்களூருவுக்கு வந்தபோது, கர்நாடகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான இர்ஷாத் கானின் மனைவி பெங்களூரு டொம்லூரில் உள்ள தனது வீட்டில் 15 நாட்கள் இளம்பெண்ணை தங்க வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இளம்பெண்ணை நஜீர்கான் காதலித்து கற்பழித்தது மற்றும் மதம் மாற்றியதற்கும், இளம்பெண்ணை சவுதி அரேபியாவுக்கு அழைத்து சென்றதற்கும் இர்ஷாத் கானின் மனைவி உதவியதாகவும், அவருக்கு இச்சம்பவத்தில் தொடர்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இளம்பெண்ணின் பெயரில் இர்ஷாத் கானின் மனைவி முகநூலில்(பேஸ்புக்) புதிய கணக்கு தொடங்கியதாகவும் தெரிகிறது.

இதையடுத்து, டொம்லூரில் உள்ள இர்ஷாத் கானின் வீட்டில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தியதுடன், அவரது மனைவியிடமும் விசாரணை மேற்கொண்டு தகவல்களை பெற்றனர். மேலும் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மனைவியின் செல்போன்கள், மடிக்கணினிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கர்நாடக ஐ.ஏ.எஸ். அதிகாரியான இர்ஷாத் கான், கலபுரகியில் வணிக வரித்துறை கமிஷனராக இருந்து வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து நேற்று இர்ஷாத் கான் நிருபர்களிடம் கூறுகையில், “கேரள இளம்பெண்ணை பெங்களூரு தொழில்அதிபரின் மகன் காதலித்து திருமணம் செய்ததற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனது மனைவி சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார். அதனால் இளம்பெண் மற்றும் நஜீர்கானின் காதலுக்கு உதவி செய்திருக்கலாம். இதுதொடர்பாக எனது வீட்டில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தியது உண்மை தான். எனது மனைவியிடம் விசாரித்து சில தகவல்களை அதிகாரிகள் பெற்று சென்றுள்ளனர்,“ என்றார்.

கர்நாடக ஐ.ஏ.எஸ். அதிகாரி வீட்டில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்திய சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story