காவிரி பிரச்சினையில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டு உள்ளது - வைகோ குற்றச்சாட்டு


காவிரி பிரச்சினையில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டு உள்ளது - வைகோ குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 1 July 2018 11:00 PM GMT (Updated: 1 July 2018 10:21 PM GMT)

காவிரி பிரச்சினையில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டு உள்ளது என்று ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ குற்றம்சாட்டி உள்ளார்.

நெல்லை,

நெல்லையில் வைகோ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் 19 மாவட்டங்கள் காவிரி ஆற்றை நம்பி உள்ளது. காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு அநீதி இழைக்கப்பட்டு உள்ளது. நடுவர் மன்ற தீர்ப்பு என்பது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு இணையானது, அதிகாரமும் கொண்டது. நடுவர் மன்ற தீர்ப்பை ஆணையம் அப்படியே நிறைவேற்றி இருந்தால் தமிழகம் பாதுகாக்கப்பட்டு இருக்கும்.

ஆனால் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு நீர்த்து போக செய்யப்பட்டு விட்டது. காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்ற தீர்ப்பால் தமிழகம் வஞ்சிக்கப்பட்டு உள்ளது.

இது தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட துரோகம். இப்போது நாம் வஞ்சிக்கப்பட்டு உள்ளோம். ஆனால் தமிழக அரசு இந்த உண்மையை மக்களிடம் மறைத்து வெற்றி தம்பட்டம் அடித்து கொண்டாடுகிறது. கர்நாடகா அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிடப் போவதாக கூறிஉள்ளது. காவிரி நதிநீர் பிரச்சினையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அணுகுமுறை சரியாக இருந்தது. தற்போது உள்ள தமிழக அரசு மத்திய அரசின் கைப்பாவையாக பணிந்து கிடக்கும் அரசாக செயல்படுகிறது. தமிழகத்தில் நடக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் மத்திய, மாநில அரசுகள்தான் காரணம். இவ்வாறு வைகோ கூறினார்.

Next Story