திருப்பூர் புதியபஸ் நிலையம் அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை


திருப்பூர் புதியபஸ் நிலையம் அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 11 July 2018 4:45 AM IST (Updated: 11 July 2018 4:45 AM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்,

திருப்பூர் புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பின்னர் டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இதற்கிடையே கடையை திறக்கக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மதுப் பிரியர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலையோரம் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் பின்னர் அதற்கு பதிலாக மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை பல்வேறு இடங்களில் தமிழக அரசு திறந்து வருகிறது. இதற்கு பல பகுதிகளில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பூர் புதிய பஸ் நிலையம் பின்புறம் ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. அந்த பகுதியில் பஸ் நிலையம், உழவர் சந்தை போன்றவை இருந்து வருவதால் பலர் இந்த டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனைத்தொடர்ந்து அந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது.

இதற்கிடையில் நேற்று மாலை அந்த டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு மது விற்பனை நடைபெற்றுக்கொண்டிருந்தது. திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 8, 9-வது வார்டு பொதுமக்கள் மற்றும் தி.மு.க., தே.மு.தி.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சையா மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பொதுமக்கள் டாஸ்மாக் கடையை மூடும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். இருப்பினும் டாஸ்மாக் கடைக்கு வந்த மதுப்பிரியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் மது அருந்திக்கொண்டிருந்தனர். இதன் பின்னர் அந்த பகுதிக்கு திருப்பூர் வடக்கு தாசில்தார் ஜெயக்குமார் வந்தார். அவரிடம் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் எனக்கோரி பொதுமக்கள் மனு கொடுத்தனர். உடனே தாசில்தார் டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். உடனே பொதுமக்கள் தாசில்தாருக்கு நன்றி தெரிவித்தனர்.

இதன் பின்னர் டாஸ்மாக் கடைக்குள் மது அருந்திக்கொண்டிருந்தவர்களை வெளியே அழைத்து சென்றனர். இதைத்தொடர்ந்து டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இதன் பின்னரே பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பொதுமக்கள் போராட்டத்தை தொடர்ந்து டாஸ்மாக் கடை மூடப்பட்டது.

இதற்கிடையே கடைக்குள் மது அருந்திக்கொண்டிருந்தவர்களை போலீசார் வெளியே அழைத்து சென்றனர். தொடர்ந்து மதுப்பிரியர்கள் அங்கிருந்து வெளியே வந்து பி.என்.ரோட்டில் அமர்ந்து கொண்டு டாஸ்மாக் கடையை திறக்க வேண்டும் எனக்கூறி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. உடனே அங்கு விரைந்து வந்த போலீசார் அவர்களை கலைந்து செல்ல வைத்தனர்.


Next Story