வருமானவரி சோதனை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்
நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்களின் வீடுகள், அலுவலகங்களில் நடத்தப்பட்ட வருமான வரிசோதனை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறினார்.
அரூர்,
தர்மபுரி மாவட்டம் முத்தானூரில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தின் முடிவில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
நெடுஞ்சாலைத்துறையில் ஒப்பந்த பணிகளை மேற்கொண்ட ஒப்பந்தாரர்கள் மற்றும் தொடர்புடையவர்களின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டுள்ளது. முதல்–அமைச்சருக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர்களின் வீடுகள், அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ரஜினிகாந்த் சிறந்த நடிகர். அவருக்கு அரசியலோ, பொதுமக்களின் பிரச்சினைகளோ தெரியாது. யாரோ கூறிய தகவலின் அடிப்படையில் அவர் பசுமை வழிசாலை திட்டத்தை ஆதரிப்பதாக கூறுகிறார்.
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் குறிப்பிட்ட சாதிகளை இணைப்பது மாநிலங்களின் அதிகார பட்டியலில் இருந்தது. தற்போது இதை மத்திய பட்டியலுக்கு கொண்டு செல்ல பாராளுமன்றத்தில் கூட்டாக 4 மசோதாக்களை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளனர். மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கும் இந்த செயலுக்கு பல மாநிலக்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. பா.ம.க.வும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறினார்.