கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 87 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு


கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 87 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 21 July 2018 10:30 PM GMT (Updated: 21 July 2018 9:57 PM GMT)

கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 87 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

மண்டியா, 

கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 87 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும் பிருந்தாவன் பூங்காவுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

குமாரசாமி சிறப்பு பூஜை

கர்நாடகத்தில் கடந்த மே மாதம் இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் மாநிலம் முழுவதும் தொடர்ந்து கனமழை கொட்டியது. கர்நாடக கடலோர மாவட்டங்கள், தென்கர்நாடக மாவட்டங்கள் என அனைத்து பகுதிகளிலும் பருவமழை இடைவிடாது கொட்டி வருகிறது. இதனால் மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளும் கிடுகிடுவென நிரம்பின.

குறிப்பாக மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா அருகே கண்ணம்பாடியில் காவிரியின் குறுக்கே அமைந்துள்ள கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணையும், மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமத்தில் கபினி அணையும் முழுமையாக நிரம்பி விட்டன. இதனால் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 1 லட்சம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதன்காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் கபினி, கே.ஆர்.எஸ். அணைகள் நிரம்பியதால் நேற்று முன்தினம் முதல்–மந்திரி குமாரசாமி சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.

அணைகளின் நீர்மட்டம்

கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் முதல்–மந்திரி குமாரசாமி சிறப்பு பூஜை செய்ய இருந்ததால், தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டிருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 59 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த நிலையில் தற்போது அந்த தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை நிலவரப்படி 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் 124 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 43,499 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 47,789 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இதேபோல கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி உயரம் கொண்ட கபினி அணையில் 2,283.50 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. கபினி அணையில் இருந்து வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

வினாடிக்கு 87 ஆயிரம் கனஅடி தண்ணீர்

2 அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு வினாடிக்கு 87 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அதே சமயம் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டதால், பிருந்தாவன் பூங்காவுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் யாரும் சென்றுவிடாமல் இருக்க அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


Next Story