சத்தி அருகே டிரைவர் கொலை: குற்றவாளிகளை கைது செய்யக்கோரி ஆஸ்பத்திரியில் உறவினர்கள் போராட்டம்


சத்தி அருகே டிரைவர் கொலை: குற்றவாளிகளை கைது செய்யக்கோரி ஆஸ்பத்திரியில் உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 6 Aug 2018 2:30 AM IST (Updated: 6 Aug 2018 12:25 AM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலம் அருகே உள்ள அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணிராஜ்.

சத்தியமங்கலம்,

சத்தியமங்கலம் அருகே உள்ள பட்டவர்த்தி அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணிராஜ். டிராக்டர் டிரைவர். இவருக்கும் அவருடைய தாய்மாமா ஆரோக்கியசாமிக்கும் இடையே கடந்த 3–ந் தேதி நிலத்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஆரோக்கியசாமி அங்கு கிடந்த கடப்பாரையை எடுத்து, அந்தோணிராஜை தாக்கினார். இதனால் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இவருடைய பிணத்தை சத்தியமங்கலம் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆரோக்கியசாமியை கைது செய்தனர்.

இந்த நிலையில் போலீசார் நேற்று முன்தினம் அந்தோணிராஜியின் உடலை மறு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தனர். அப்போது அந்தோணிராஜியின் உறவினர்கள், கொலைக்கு உடந்தையாக இருந்த மற்ற குற்றவாளிகளை கைது செய்யாமல் அந்தோணிராஜின் உடலை கோவைக்கு கொண்டு செல்லக்கூடாது என்றும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமி அங்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு, விசாரணையின் போது மற்ற குற்றவாளிகளும் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து அந்தோணிராஜியின் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் அந்தோணிராஜியின் உடல் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் போலீசார் ஆரோக்கியசாமியின் மகள்கள் ஆரோக்கியமேரி, அவருடைய கணவர் மகிமைராஜ், சகோதரி ரூபிமேரி ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story