குரங்கணி-டாப்ஸ்டேஷன் இடையே சாலை அமைக்க வேண்டும்


குரங்கணி-டாப்ஸ்டேஷன் இடையே சாலை அமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 6 Aug 2018 10:00 PM GMT (Updated: 6 Aug 2018 8:23 PM GMT)

குரங்கணியில் இருந்து டாப்ஸ்டேஷனுக்கு சாலை அமைக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வர்த்தகர் காங்கிரஸ் நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

தேனி,



தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வந்திருந்து மனுக்கள் அளித்தனர். மக்கள் அளித்த மனுக்கள் மீது துரித விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில், தேனி மாவட்ட வர்த்தகர் காங்கிரஸ் தலைவர் சங்கரநாராயணன் தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

போடி அருகே கொட்டக்குடி மற்றும் கொம்புதூக்கி அய்யனார் கோவில் பகுதியில் சுமார் 250 வீடுகளில் மக்கள் வசிக்கிறார்கள். கொட்டக்குடியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் சுமார் 30 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும்.

மேலும், கொட்டக்குடியில் இருந்து போடிக்கு பஸ் வசதி கிடையாது. பள்ளி மேல் படிப்பு படிக்கும் மாணவ, மாணவிகளின் நலன் கருதி கொட்டக்குடியில் இருந்து காலை மற்றும் மாலை நேரத்தில் போடிக்கு பஸ் இயக்க வேண்டும். குரங்கணியில் இருந்து டாப்ஸ்டேஷனுக்கு மலைச்சாலை அமைக்க வேண்டும். இந்த சாலை அமைத்தால் கேரளாவுக்கு மிகக்குறைந்த நேரத்தில் சென்று வர முடியும். மக்களின் பொருளாதார வசதி மேம்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் நாகரத்தினம், மேற்கு மாவட்ட செயலாளர் சுருளி மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுக்களில், ‘போடி அருகே உள்ள கொட்டக்குடி, டாப்ஸ்டேஷன் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் இந்த ஆண்டு குறிஞ்சி மலர் பூக்கும் நிலையில் உள்ளது. இந்த பகுதிகள் சுற்றுலா தலமாக உள்ளது. எனவே, இந்த பகுதிகளில் குறிஞ்சி மலர் விழா நடத்தவும், அங்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இங்கு இதய ரத்தக் குழாய் அடைப்புகளை நீக்குவதற்கான ஆஞ்சியோ கிராம் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை வசதி இல்லை. இதனால் மாரடைப்பு ஏற்பட்டவர்கள் தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலைமை உள்ளது. எனவே, இதுபோன்ற சிகிச்சை வசதிகளையும் இங்கு ஏற்படுத்த வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

போடி அருகே பி.அம்மாபட்டி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கையில் வீட்டு மனைப்பட்டாவுடன் வந்து மனு அளித்தனர். அவர்கள் கூறுகையில், ‘கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் பகுதியில் தனியார் நிலத்தை அரசு வாங்கி, 242 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டாவாக வழங்கப்பட்டது. நிலம் அளவீடு செய்து கொடுக்கப்பட்டது. ஆனால், அரசு பதிவேடுகளில் எங்கள் பெயர் இல்லை. எனவே, எங்கள் பெயருக்கு மாற்றிக்கொடுக்க வேண்டும்’ என்றனர்.

ஆனைமலையன்பட்டி வெள்ளைக்கரடு காலனியை சேர்ந்த பிரபாகரன் மனைவி கவுரி தனது குடும்பத்துடன் வந்து அளித்த மனுவில், ‘எனது கணவரை கடந்த மாதம் 7-ந்தேதி பாம்பு கடித்துவிட்டது. சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஆட்டோவில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் எனக்கு தோல்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. தற்போது நான் எனது மகன், மகள் மற்றும் மாமியார் ஆகியோருடன் வசித்து வருகிறேன். என் வீட்டுக்கு அருகில் பாம்பு புற்று உள்ளது. இதனால், உறவினர் வீட்டில் இரவில் தூங்கி வருகிறோம். இங்கு பாம்புகளிடம் இருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும். குடும்பச் சூழல் கருதி எனக்கு ஏதேனும் அரசு வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். 

Next Story