குவாரிக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை கண்காணிப்பு குழுவிடம் தெரிவிக்கலாம் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


குவாரிக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை கண்காணிப்பு குழுவிடம் தெரிவிக்கலாம் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 5 Sept 2018 4:00 AM IST (Updated: 5 Sept 2018 1:13 AM IST)
t-max-icont-min-icon

குவாரிக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை கண்காணிப்பு குழுவிடம் தெரிவிக்கலாம் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

சிவகங்கை மாவட்டம், தெ.புதுக்கோட்டையைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

வைகை ஆற்றங்கரையோரம் எங்கள் கிராமம் அமைந்துள்ளது. விவசாயத்துக்கும், குடிநீருக்கும் வைகை ஆற்றையே நம்பியுள்ளோம். கடந்த 5 ஆண்டுகளாக வறட்சி நிலவியதால் விவசாயம், குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே வைகை ஆற்றில் 2001–ம் ஆண்டு முதல் 2008–ம் ஆண்டு வரை மணல் குவாரி செயல்பட்டது. அப்போது பாறை தெரியும் அளவுக்கு அதிக ஆழத்தில் மணல் அள்ளியதால் ஆலங்குளம் கூட்டு குடிநீர் திட்டம் கடுமையாக பாதிக்கப்பட்து. விவசாய கிணறுகள், வீடுகளில் உள்ள கிணறுகளிலும் நீர்மட்டம் 200 அடிக்குகீழ் சென்றுவிட்டது.

இந்த நிலையில் தெ.புதுக்கோட்டையில் மீண்டும் மணல் குவாரி திறக்கப்பட்டுள்ளது. இந்த குவாரியில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் பார்த்திபனூர் மதகு அணை அமைந்துள்ளது.

அண்மையில் காவிரியில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளியதால் முக்கொம்பு தடுப்பணை உடைந்தது போல், பார்த்திபனூர் மதகு அணையும் உடையும் ஆபத்து உள்ளது. இதனால் தெ.புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் கடும் பாதிப்பை சந்திக்கும்.

அங்குள்ள மணல் குவாரிக்கு தடை விதிக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தெ.புதுக்கோட்டை மணல் குவாரிக்கு வழங்கப்பட்ட லைசென்சை ரத்து செய்தும், மணல் குவாரிக்கு தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

முடிவில், “மணல் குவாரிகளை கண்காணிக்க மாவட்ட அளவிலும், மாவட்ட அளவிலும் கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மனுதாரர் தனது கோரிக்கை தொடர்பாக மணல் குவாரி கண்காணிப்புக்குழுவை அணுகலாம்“ என்று கூறி மனுவை முடித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story