ஒரு ஆண்டு ஆகியும் சுரங்கப்பாதை பணி தொடங்காததை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


ஒரு ஆண்டு ஆகியும் சுரங்கப்பாதை பணி தொடங்காததை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Sep 2018 11:15 PM GMT (Updated: 11 Sep 2018 10:59 PM GMT)

வாணியம்பாடி நியூடவுன் ரெயில்வே சுரங்கப்பாதை பணிகளுக்காக கேட் மூடி ஒரு ஆண்டு ஆகியும் பணிகள் தொடங்காததை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வாணியம்பாடி,

வாணியம்பாடி நியூடவுன் பகுதி இணைக்கும் இடத்தில் எல்.சி.81 ரெயில்வே கேட் அமைந்துள்ளது. இதன்வழியாக அடிக்கடி ரெயில்கள் சென்று வருவதால் கேட் மூடும் நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பல மணி நேரமாக நின்று சென்று வந்தனர்.

இதனால் அப்பகுதியில் மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும் என்று நீண்டநாட்களாக பொதுமக்கள் கோரிக்கை வைத்து இருந்தனர். இதன் அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் சுமார் ரூ.18 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து பணிகள் தொடங்குவதற்காக கடந்த கண்டு 11.9.2017 அன்று ரெயில்வே கேட் நிரந்தரமாக மூடப்பட்டது.

ரெயில்வே கேட் மூடி ஒரு ஆண்டு முடிவடைந்த நிலையில் ஒப்பந்ததாரர் இப்பணிகளை மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தி வருவதால் பொதுமக்கள் ரெயில்வே கேட் பகுதியை கடக்க சுமார் 5 கிலோமீட்டர் தினமும் சுற்றி வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் இப்பகுதி வழியாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள், இளைஞர்கள் ஆபத்தான நிலையில் நியூடவுன் ரெயில்வே கேட் பகுதியை கடந்து வருகின்றனர். அவ்வாறு கடக்கும் பொழுது இளைஞர்கள் விபத்துகளில் சிக்கி காயமடைந்து வரும் சூழல் தொடர்கதையாக உள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கருப்பு சட்டை அணிந்தும், கைகளில் கருப்புகொடி மற்றும் பதாகைகளை ஏற்றி ரெயில்வே கேட் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் நகரசபை உறுப்பினர் சவுகத் பர்ஹானா தலைமை தாங்கினார். ம.தி.மு.க. நகர செயலாளர் நாசீர்கான், தே.மு.தி.க. நகர செயலாளர் சங்கர், வசீம், அக்ரம் மற்றும் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.

மேலும் வாணியம்பாடி பகுதியில் ரெயில்வே கேட்டுக்கு முதலாம் ஆண்டு நினைவு தினம் என்று கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story