சேலம்-சென்னை இடையே மாலை நேர விமான சேவை தொடக்கம் - மாவட்ட சிறு, குறுதொழிற்சாலைகள் சங்க தலைவர் தகவல்


சேலம்-சென்னை இடையே மாலை நேர விமான சேவை தொடக்கம் - மாவட்ட சிறு, குறுதொழிற்சாலைகள் சங்க தலைவர் தகவல்
x
தினத்தந்தி 18 Sep 2018 11:00 PM GMT (Updated: 18 Sep 2018 10:24 PM GMT)

அடுத்த மாதம் 28-ந் தேதி முதல் சேலம்-சென்னை இடையே மாலை நேர விமான சேவை தொடங்கப்படும் என மாவட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் சங்கத்தின் தலைவர் மாரியப்பன் தெரிவித்தார்.

சேலம்,

மாலை நேர விமான சேவை தொடக்கம் குறித்து, சேலத்தில் மாவட்ட சிறு மற்றும் குறுதொழிற்சாலைகள் சங்கத்தின் தலைவர் மாரியப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசின் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் உதான் திட்டத்தின் மூலம் 36 பயணிகளுக்கு குறைந்த கட்டணத்தில் ட்ரூஜெட் தனியார் நிறுவனம் கடந்த மார்ச் மாதம் கடைசி வாரம் முதல் காலை நேரத்தில் சென்னை-சேலம் வழித்தடத்தில் தினந்தோறும் தொடர்ந்து விமான சேவைகளை செய்து வருகிறது. விமான போக்குவரத்து அமைச்சகத்தின் ஆய்வுபடி கடந்த 5 மாதங்களாக ட்ரூஜெட் விமானத்தின் இருக்கை சராசரியாக 70 சதவீதமும், பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் கிட்டத்தட்ட 100 சதவீத பயன்பாடு இருப்பதாக புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

தற்போது சென்னையில் காலையில் 9.50 மணிக்கு புறப்படும் விமானம் சேலத்திற்கு 10.40 மணிக்கு வந்து இங்கிருந்து 11 மணிக்கு புறப்பட்டு காலை 11.50 மணிக்கு சென்னை விமான நிலையத்தை அடைகிறது. இந்த பயண நேரத்தை காலை 9 மணியளவில் சேலத்தில் இருந்து இந்த விமான சேவையை மாற்றி அமைக்குமாறு தொடர்ந்து விமான பயணிகள் சார்பில் மத்திய அரசுக்கு வேண்டுகோள் வைத்து இருக்கிறோம்.

தொழில் அதிபர்கள், வர்த்தகர்கள் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு தற்போது விமான போக்குவரத்து அமைச்சகம் மாலை நேரத்தில் ஒரு விமான சேவையை நடத்திட அனுமதி வழங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து அடுத்த மாதம் (அக்டோபர்) 28-ந் தேதி முதல் தினந்தோறும் மாலை 4 மணிக்கு சென்னையில் புறப்பட்டு 5.10 மணிக்கு சேலம் விமானம் வந்தடைகிறது. பின்னர் அந்த விமானம் சேலத்தில் இருந்து மாலை 5.40 மணிக்கு புறப்பட்டு மாலை 6.45 மணிக்கு சென்னை விமான நிலையத்தை சேரும் என ட்ரூஜெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்காக ஏ.டி.ஆர். 72 சிறிய ரக விமானம் பயன்படுத்தப்படும். 72 இருக்கைகள் கொண்ட இந்த விமானத்தின் பயணம் செல்வதற்கான கட்டணங்கள் வழக்கமான கட்டணமாக இருக்கும். ட்ரூஜெட் நிறுவனமே கட்டணத்தை அவ்வப்போது மாற்றி கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story