15 நாட்களாக குடிநீர் வினியோகம் பாதிப்பு - பொதுமக்கள் அவதி


15 நாட்களாக குடிநீர் வினியோகம் பாதிப்பு - பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 7 Oct 2018 11:00 PM GMT (Updated: 7 Oct 2018 10:33 PM GMT)

கடலூர் முதுநகர் பகுதியில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

கடலூர் முதுநகர்,

பிரதான குழாயில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக கடலூர் முதுநகர் பகுதியில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

கடலூர் நகராட்சி, 3 டவுன் பஞ்சாயத்துகள் மற்றும் 812 வழியோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தமிழக அரசு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ.260 கோடியே 54 லட்சம் செலவில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்தியது. இதில் கடலூர் நகராட்சியின் பங்களிப்பு மட்டும் ரூ.148 கோடியே 9 லட்சம் ஆகும்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்தை கடந்த ஆண்டு கடலூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதன் மூலம் கடலூர் நகராட்சி பகுதி மக்களுக்கு கொள்ளிடம் ஆற்று தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

ஆனால் இந்த திட்டத்தில் பூமிக்கடியில் பதிக்கப்பட்ட குழாய்களில் அடுத்தடுத்து உடைப்பு ஏற்பட்டதால் நகராட்சியில் பெரும்பாலான பகுதிகளில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. குறிப்பாக மஞ்சக்குப்பம், சாவடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நாள் கணக்கில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் குடிநீருக்காக மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் கடலூர் முதுநகர் பகுதியில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறும்போது, குடிநீருக்காக நகராட்சி நிர்வாகத்தைத்தான் நம்பி இருக்கிறோம். ஆனால் கடந்த 15 நாட்களாக கடலூர் முதுநகர் பகுதியில் குடிநீர் வினியோகம் இல்லை. நகராட்சி நிர்வாகமும் மாற்று ஏற்பாடு எதுவும் செய்யவில்லை. இதனால் தனியார் மூலம் டிராக்டர் மற்றும் லாரிகளில் கொண்டு வரப்படும் குடிநீரை காசு கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகிறோம். ஒரு நாள், 2 நாள் என்றால் பரவாயில்லை. ஆனால் இது தொடர்கதையாக இருப்பதால் ஏழை, எளிய மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே குடிநீர் வினியோகம் செய்ய நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் போராட்டம் நடத்துவோம் என்றனர்.

நகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, குண்டியமல்லூரில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டதுதான் குடிநீர் வினியோக பாதிப்புக்கு காரணம். தற்போது அந்த பகுதியில் பெய்த மழையினால் அதிகஅளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது. மழைநீர் வடிந்த பின்னர்தான் அவற்றை சீரமைக்க முடியும். இனி வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் மழைக்காலம் முடிவடைந்த பிறகுதான் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய முடியும்.எனவே முன்பு போலவே கடலூர், கேப்பர்மலை, திருவந்திபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள நகராட்சியின் நீர் ஆதாராங்களில் இருந்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இதற்காக நீரேற்று நிலையங்களில் புதிதாக மின்மோட்டார்களை பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஒரு சில நாட்களில் இந்த பணி முடிவடையும். அதன் பின்னர் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்றார்.


Next Story