கேரளாவுக்கு கன்டெய்னர் லாரியில் ரூ.27½ லட்சம் எரிசாராயம் கடத்தல் டிரைவர் உள்பட 2 பேர் கைது


கேரளாவுக்கு கன்டெய்னர் லாரியில் ரூ.27½ லட்சம் எரிசாராயம் கடத்தல் டிரைவர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 8 Nov 2018 11:00 PM GMT (Updated: 8 Nov 2018 9:48 PM GMT)

நாமக்கல் அருகே கேரளாவுக்கு கடத்தப்பட்ட ரூ.27½ லட்சம் மதிப்பிலான எரிசாராயம் கன்டெய்னர் லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக லாரி டிரைவர் உள்பட 2 பேரை மதுவிலக்கு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல்,

வட இந்தியாவில் இருந்து தமிழகம் வழியாக கேரளாவிற்கு எரிசாராயம் கடத்தி செல்வதாக சென்னை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குனர் ராஜேஷ்தாஸூக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் சேலம் மண்டல மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் மற்றும் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு ஆகியோர் அறிவுரையின்படி நாமக்கல் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செந்தில் தலைமையில் திருச்சி மத்திய குற்ற புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், நாமக்கல் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுபாஷ் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் நேற்று காலை 6 மணி அளவில் சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் நாமக்கல் அருகே புதுச்சத்திரத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி வந்த மராட்டிய மாநில பதிவெண் கொண்ட கன்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். இந்த சோதனையின் போது அந்த லாரியில் ரூ.27½ லட்சம் மதிப்பிலான 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 550 கேன்களில் 19 ஆயிரத்து 250 லிட்டர் எரிசாராயத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து லாரியை ஓட்டி வந்த திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூர் மாணிக்கம்நகர் பகுதியை சேர்ந்த டிரைவர் கமலக்கண்ணன் (வயது 49) மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூர் கோவிந்தரெட்டிபள்ளி பகுதியை சேர்ந்த சிவய்யா (30) ஆகிய 2 பேரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையின் போது அவர்கள் அரியானா மாநிலத்தில் இருந்து பாலாஜி கெமிக்கல்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரிலும், திரவ குளோரின் என்ற பெயரிலும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு நாமக்கல் வழியாக எரிசாராயம் கடத்தியது தெரியவந்தது. இதை தொடர்ந்து எரிசாராயம் கடத்தி வந்த கமலக்கண்ணன் மற்றும் சிவய்யா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கன்டெய்னர் லாரி மற்றும் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டன. கைப்பற்றப்பட்ட லாரி மற்றும் எரிசாராயத்தின் மொத்த மதிப்பு ரூ.40 லட்சம் என போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து நாமக்கல் மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.

இந்த எரிசாராயம் கடத்தலில் தொடர்புடைய சென்னையை சேர்ந்த 2 முக்கிய நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. எரிசாராயத்துடன் வாகனத்தை பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்த மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாரை நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு மற்றும் சேலம் மண்டல மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் ஆகியோர் பாராட்டினர்.

Next Story