திருப்பூர் மாவட்டத்தில் குரூப்-2 தேர்வை 12 ஆயிரம் பேர் எழுதினர்


திருப்பூர் மாவட்டத்தில் குரூப்-2 தேர்வை 12 ஆயிரம் பேர் எழுதினர்
x
தினத்தந்தி 11 Nov 2018 11:30 PM GMT (Updated: 11 Nov 2018 10:52 PM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் குரூப்-2 தேர்வை 12 ஆயிரம் பேர் எழுதினார்கள்.

திருப்பூர்,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் காலிப்பணியிடங்களை நிரப்ப தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. குரூப்-2 காலியாக உள்ள பல்வேறு பதவிகளுக்கான போட்டித்தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை எழுதுவதற்கு தமிழ்நாட்டில் 6 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.

குரூப்-2 தேர்வை திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வட்டத்தில் 7 ஆயிரத்து 190 பேரும், தாராபுரத்தில் 2 ஆயிரத்து 214 பேரும், உடுமலை வட்டத்தில் 2 ஆயிரத்து 846 பேரும் என மொத்தம் 12 ஆயிரத்து 250 பேர் தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்காக திருப்பூர், தாராபுரம், உடுமலை ஆகிய 3 வட்டங்களில் 33 தேர்வு மையங்கள் மற்றும் 48 தேர்வு அறைகள் தயார் செய்யப்பட்டிருந்தது.

நேற்று காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. முன்னதாக குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தவர்கள் தேர்வு மையங்களுக்கு சென்று, தங்களது தேர்வு அறைகளை விளம்பர பதாகைகளில் தேடினர். மேலும், தேர்வு எழுதுவதற்கு பலர் தங்களது குழந்தைகளுடன் தேர்வு மையங்களுக்கு வந்திருந்தனர்.

அவர்கள் தேர்வு தொடங்கியதும் குழந்தைகளை தங்களது உறவினர்களிடம் கொடுத்து விட்டு தேர்வு எழுதுவதற்கு சென்றனர். இதனால் தேர்வு முடியும் வரை உறவினர்கள் குழந்தைகளுடன் காத்திருந்தனர். திருப்பூரில் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக்கல்லூரி உள்ளிட்ட தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி பேசியதாவது:- திருப்பூர் மாவட்டத்தில் 12 ஆயிரத்து 250 நபர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த தேர்வை கண்காணிக்க தேர்வு மைய மேற்பார்வையாளர்கள், பறக்கும் படையினர், தேர்வு மைய அலுவலர்கள் மற்றும் மொபைல் பிரிவினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த தேர்வு மையங்களை கண்காணிக்கும் வகையில் 40 வீடியோ கிராபர்களும் பணியில் ஈடுபட்டனர். இதுபோல் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி அலுவலர்கள் மற்றும் சிறப்பு இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தேர்வு எழுதுபவர்கள் சிரமமின்றி தேர்வு எழுதிட மின்சாரம், குடிநீர் வசதி உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்று அவர் கூறினார்.

முன்னதாக மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமி, குமரன் அரசு மகளிர் கலைக்கல்லூரி மற்றும் ஜெய்வாபாய் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையங்களை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் பாலுசாமி, தாசில்தார்கள் ரவிச்சந்திரன் (திருப்பூர் தெற்கு), ஜெயக்குமார் (திருப்பூர் வடக்கு) மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். திருப்பூர் மாவட்டத்தில் நேற்று நடந்த குரூப்-2 தேர்வில் திருப்பூர் வட்டத்தில் 7 ஆயிரத்து 190 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட நிலையில், 4 ஆயிரத்து 986 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்திருந்தனர். 2 ஆயிரத்து 204 பேர் தேர்வு எழுத வரவில்லை.

இதுபோல் தாராபுரம் வட்டத்தில் 2 ஆயிரத்து 214 பேரில், ஆயிரத்து 640 பேர் தேர்வு எழுத வந்தனர். 574 பேர் தேர்வு எழுத வரவில்லை. உடுமலை வட்டத்தில் 2 ஆயிரத்து 846 பேரில், 2 ஆயிரத்து 67 பேர் தேர்வு எழுத வந்தனர். 779 பேர் தேர்வு எழுத வரவில்லை. திருப்பூர் மாவட்டத்தில் மொத்தமாக 12 ஆயிரத்து 250 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட நிலையில், 8 ஆயிரத்து 693 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 3 ஆயிரத்து 557 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு எழுத வராதவர்கள் 30 சதவீதம் பேர் ஆகும்.



Next Story