பர்கூர் வனப்பகுதியில் வயது முதிர்வால் ஆண் யானை சாவு


பர்கூர் வனப்பகுதியில் வயது முதிர்வால் ஆண் யானை சாவு
x
தினத்தந்தி 13 Dec 2018 3:30 AM IST (Updated: 13 Dec 2018 3:03 AM IST)
t-max-icont-min-icon

பர்கூர் வனப்பகுதியில் வயது முதிர்வால் ஆண் யானை இறந்தது.

அந்தியூர்,

ஈரோடு மாவட்டம் பர்கூர் வனப்பகுதிக்கு உட்பட்ட செல்லம்பாளையம் காப்புக்காட்டில் வனச்சரகர் பாலகிருஷ்ணன் வன ஊழியர்களுடன் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அங்கு ஒரு ஆண் யானை இறந்து கிடந்தது தெரிந்தது. அவர்கள் உடனே இதுபற்றி மாவட்ட வன அதிகாரி விஸ்வநாதனுக்கு தகவல் கொடுத்தார்கள்.

அதன்பேரில் விஸ்வநாதன், சத்தி புலிகள் காப்பக கால்நடை டாக்டர் அசோகனுடன் சம்பவ இடத்துக்கு சென்றார். அதன் பின்பு யானையின் உடலை அசோகன் பிரேத பரிசோதனை செய்தார். பிறகு அவர் கூறும்போது, ‘இறந்த ஆண் யானைக்கு 45 வயது இருக்கலாம். வயது முதிர்வால் அது இறந்துள்ளது‘ என்றார்.

அதைத்தொடர்ந்து தலா 1 மீட்டர் நீளமுடைய யானையின் 2 தந்தங்களும் பத்திரமாக வெட்டி எடுக்கப்பட்டு, வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பிறகு யானையின் உடல் மற்ற விலங்குகளுக்கு உணவாக அங்கேயே விடப்பட்டது.

இதற்கிடையே வயது முதிர்வால் இறந்ததால், யானையின் உடலுக்கு வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.


Next Story