‘சாதி சான்றிதழ் வழங்காவிட்டால் விஷம் கொடுங்கள்’ பன்றி வளர்ப்போர் மனு
‘சாதி சான்றிதழ் வழங்காவிட்டால் விஷம் கொடுங்கள்’ பன்றி வளர்ப்போர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பன்றி வளர்ப்போர் திரளாக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:– ராமநாதபுரத்தில் பன்றி வளர்ப்பவர்கள் 200–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். 500–க்கும் மேற்பட்டோர் பன்றி வளர்ப்பதை தொழிலாக கொண்டு வாழ்வாதாரம் மேற்கொண்டு வருகிறோம். இந்த நிலையில் சுகாதாரக்கேடு என்ற பெயரில் வெளிமாவட்டத்தினரை வைத்து எங்களின் பன்றிகளை பிடித்து செல்கின்றனர்.
இதனால், எங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வாழ வழியின்றி தவித்து வருகிறோம். காட்டுநாயக்கர் பிரிவை சேர்ந்த எங்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுக்கின்றனர். இதனால் எங்கள் குழந்தைகள் 5–வது வகுப்பிற்கு மேல் படிக்க முடியாமல் பன்றி வளர்க்கும் தொழிலைத்தான் செய்ய வேண்டி உள்ளது. சாதி சான்றிதழ் கொடுத்தால் படித்து வேலைக்கு செல்ல வழி ஏற்படும். இவ்வாறு செய்யாமல் பன்றிகளையும் பிடித்து செல்வதால் வாழ வழியின்றி இறுதியாக இங்கு வந்துள்ளோம். எங்களுக்கு சாதி சான்றிதழ் கொடுத்து பிழைக்க வழிவகை செய்யுங்கள். இல்லாவிட்டால் பன்றி வளர்க்க அனுமதி கொடுங்கள்.
இவை இரண்டும் செய்ய முடியாவிட்டால் விஷம் கொடுத்தால் குடித்து தற்கொலை செய்து கொள்கிறோம். ஏனெனில் எங்களுக்கு வேறு எந்த தொழிலும் தெரியாது. அதற்கான கல்வி அறிவும் பெறமுடியவில்லை. எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து பன்றிகளை பிடிப்பதை தடுத்து நிறுத்துவதோடு, சாதி சான்றிதழ் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.