திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்ய இந்திய கம்யூனிஸ்டு கட்சியை தி.மு.க. பயன்படுத்தவில்லை முத்தரசன் பேட்டி


திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்ய இந்திய கம்யூனிஸ்டு கட்சியை தி.மு.க. பயன்படுத்தவில்லை முத்தரசன் பேட்டி
x
தினத்தந்தி 7 Jan 2019 11:00 PM GMT (Updated: 7 Jan 2019 5:36 PM GMT)

திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்ய இந்திய கம்யூனிஸ்டு கட்சியை தி.மு.க. பயன்படுத்திக்கொள்ளவில்லை என முத்தரசன் கூறினார்.

கும்பகோணம்,


தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

வருகிற 28–ந் தேதி நடைபெற இருந்த திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்திருப்பதை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கிறது. 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் நடைபெற்றபோது திருவாரூர் தொகுதிக்கும் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முயற்சி மேற்கொண்டது.

அப்போது வடகிழக்கு பருவமழையை காரணம் காட்டி, தேர்தல் நடத்துவதை ஒத்திவைக்க வேண்டும் என தமிழக அரசு கூறியது. அதன் பிறகு ‘கஜா’ புயல் ஏற்பட்டு திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மிகப்பெரிய பேரழிவு ஏற்பட்டது.


தமிழகத்தில் 20 தொகுதிகளில் தேர்தல் நடத்த வேண்டி உள்ளது. இந்த நிலையில் திருவாரூரில் மட்டும் தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் என்ன? ஒரு மாநிலத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்றால் தேர்தல் ஆணையம் மாநில அரசின் ஒப்புதலை கேட்ட பிறகு தான் தேர்தல் அறிவிப்பை வெளியிடுகிறது.

வடகிழக்கு பருவ மழையின் காரணமாக தேர்தல் நடத்த வேண்டாம் என்று சொன்ன மாநில அரசு, கடுமையான புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் தேர்தல் நடத்தலாம் என எப்படி கூற முடியும்?


பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முதல்–அமைச்சர் பழனிசாமியை ஒரே நாளில் சந்தித்து திருவாரூர் தொகுதியை பா.ஜனதாவுக்கு வேண்டும் என கேட்டுள்ளனர்.

அப்போது திருவாரூர் தொகுதியை கொடுக்கவில்லை என்றால் 20 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று முதல்–அமைச்சரிடம் கூறி உள்ளனர். இவர்களுடைய சந்திப்பின் மூலம் பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. ஆகையால் இந்த சந்திப்பின் காரணத்தை மக்களுக்கு இரு தரப்பினரும் விளக்க வேண்டும்.


மத்திய பிரதேசத்தில் பிரதமர் மோடியின் பிரசார கூட்டத்துக்காக தேர்தல் நேரத்தை ஆணையம் மாற்றியது. இதுபோன்ற சம்பவங்களால் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மைக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது.

2017–2018–ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீடு தொகை பெரும்பான்மையான விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. இதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். புயல் பாதிப்பை தொடர்ந்து நெல் மகசூல் குறைந்து விட்டது. இந்த நேரத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால், விவசாயிகள் தனியாரிடம், நெல்லை குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். எனவே உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்.


2 நாட்கள் நடைபெற உள்ள பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை பாயும் என தலைமை செயலாளர் மூலமாக அறிக்கை வெளியிட்டு அரசு மிரட்டி வருகிறது. வேலைநிறுத்தம் செய்வது குற்றம் என்றால், அதை தடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கையும் குற்றம் தான். இந்த வேலைநிறுத்தம் வெற்றி பெற இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆதரவு அளிக்கும்.

தேர்தலை ரத்து செய்ய இந்திய கம்யூனிஸ்டு கட்சியை தி.மு.க. பயன்படுத்திக் கொள்ளவில்லை. இது தவறான கருத்தாகும்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது கட்சியின் மாவட்ட செயலாளர் பாரதி, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மதியழகன், குருசாமி, திருவிடைமதூர் ஒன்றிய செயலாளர் மணிமூர்த்தி ஆகியயோர் உடன் இருந்தனர்.

Next Story