காஞ்சீபுரம், உத்திரமேரூரில் சாலைமறியல்; 210 பேர் கைது


காஞ்சீபுரம், உத்திரமேரூரில் சாலைமறியல்; 210 பேர் கைது
x
தினத்தந்தி 8 Jan 2019 9:30 PM GMT (Updated: 8 Jan 2019 4:51 PM GMT)

காஞ்சீபுரம், உத்திரமேரூரில் சாலைமறியலில் ஈடுபட்ட 210 பேர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தில் மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் மாணவர் கூட்டமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சீபுரம் தாலுகா அலுவலகம் அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் நேரு தலைமை வகித்தார்.

இதில் ஆறுமுகம், லாரன்ஸ், நாகவல்லி, யுவராஜ், உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகளை வஞ்சிக்காதே, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து, வேலைவாய்ப்பை பெருக்கிடு, போக்குவரத்து ஊழியர்களுக்கு போதிய நிதி வழங்கிடு, பொதுத்துறைகளை பாதுகாத்திடு என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும், காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன் மேற்பார்வையில், சின்ன காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு போலீசாருடன் விரைந்து சென்றார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 30 பெண்கள் உள்பட 65 பேரை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பஸ் நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதற்கு உத்தரமேரூர் வட்டச்செயலாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். விவசாய அணி செயலாளர் பெருமாள் முன்னிலை வகித்தார். முன்னதாக அவர்கள் அம்பேத்கர் சிலையில் இருந்து பேரணியாக வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர் மறியலில் ஈடுபட்டதாக 52 பேரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

பெரியபாளையம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் வட்ட தலைவர் பழனி தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி திருவள்ளூர் மாவட்ட செயலாளர் எஸ். கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.செல்வராஜ், டி.பன்னீர்செல்வம், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஏ.ஜி.கண்ணன், வட்ட நிர்வாகிகள் அருள், குமார் விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் பி.ரவி, மாரிமுத்து, முருகேசன், மாதர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.ரமா, பொருளாளர் ஏ.பத்மா உள்பட பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட 93 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story