சேலம் செவ்வாய்பேட்டையில் 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - கடை உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம்


சேலம் செவ்வாய்பேட்டையில் 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - கடை உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
x
தினத்தந்தி 27 Feb 2019 4:15 AM IST (Updated: 27 Feb 2019 3:37 AM IST)
t-max-icont-min-icon

சேலம் செவ்வாய்பேட்டையில் 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடை உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

சேலம்,

தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய மக்காத தன்மை கொண்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட் டுள்ளது. அதன்படி, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுக்க 5 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளில் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சேலம் செவ்வாய்பேட்டை லாங்கிலி ரோட்டில் உள்ள ஒரு கடையில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் சென்றது. அதன்பேரில் சேலம் மாநகர் நல அலுவலர் பார்த்திபன் தலைமையில் அதிகாரிகள் நேற்று அந்த கடைக்கு சென்று சோதனை நடத்தினர்.

இந்த கடையில் இருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள், தட்டுகள் உள்ளிட்டவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்து 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து கடையின் உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

இதுகுறித்து மாநகர நல அலுவலர் பார்த்திபன் கூறும் போது, ‘சேலம் மாநகராட்சியில் இதுவரை 10 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடையின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்துள்ளோம். இன்று(நேற்று) நடத்திய சோதனையில் 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்ததுடன் கடையின் உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளோம். பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும்‘ என்றார்.


Next Story