தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான புகார்களை கட்டணமில்லா தொலைபேசி மூலம் தெரிவிக்கலாம் கலெக்டர் தகவல்


தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான புகார்களை கட்டணமில்லா தொலைபேசி மூலம் தெரிவிக்கலாம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 16 March 2019 10:30 PM GMT (Updated: 16 March 2019 7:10 PM GMT)

தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான புகார்களை பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி மூலம் தெரிவிக்கலாம் என்று பெரம்பலூர் கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர்,

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் அனுமதியின்றி பொது மற்றும் தனியார் சுவர்களில் வாக்காளர்களை கவரும் விதத்தில் செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள் மற்றும் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் இதர பரிசு பொருட்கள் வழங்குதல் போன்ற தேர்தல் விதிமீறல்கள், தேர்தல் முறைகேடுகள் நடந்தால் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் உள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 2240-ல் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்கள் புகார்களைத் தெரிவிக்கலாம். மேலும் மேற்படி கட்டணமில்லா தொலைபேசி 24 மணிநேரமும் இயங்கி வருகிறது.

தொலைபேசி மூலமாக வரும் புகார்களை பெற்று சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுத்திட 2 பேர் கொண்ட மூன்று குழுக்கள் சுழற்சி முறையில் பணியாற்றிட நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த புகார்கள் தொடர்பாக புகைப்படமாகவும், வீடியோவாகவும் புகார் அனுப்ப cV-I-G-IL என்ற செயலியை செல்போனில் கூகுல் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இப்புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை புகார் தாரர்களுக்கு தெரிவிக்கப்படும்.

மேலும் வாக்காளர் தங்களுக்கு தேவைப்படும் தகவல்களை தெரிந்து கொள்ளவும், புகார்களை தெரிவிக்கவும் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி சேவையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் பெரம்பலூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல்- 2019-ஐ முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பான புகார்களை கட்டணமில்லா தொலைபேசி வாயிலாக தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். 

Next Story