குடும்ப தகராறில் எலி மருந்தை தின்று பெண் தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை


குடும்ப தகராறில் எலி மருந்தை தின்று பெண் தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை
x
தினத்தந்தி 17 March 2019 10:15 PM GMT (Updated: 17 March 2019 9:47 PM GMT)

வலங்கைமான் அருகே குடும்ப தகராறில் எலி மருந்தை தின்று பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

வலங்கைமான்,

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே பூனாயிருப்பு மேல தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இருவருடைய மகள் ராதிகா(வயது28). இவர் நீடாமங்கலத்தை அடுத்த ரிஷியூர் அருகே உள்ள கட்டையடியை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் சங்கர்(32) என்பவரை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதன் காரணமாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

கடந்த 9–ந்தேதி கணவன், மனைவி இருவரும் கட்டையடியில் இருந்து ராதிகாவின் பெற்றோர் வீட்டுக்கு வந்தனர். அப்போது ராதிகாவுக்கும், சங்கருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.இதனால் மறுநாள் மாமனார் வீட்டில் இருந்து சங்கர் தனது ஊருக்கு சென்று விட்டார். ராதிகா பெற்றோர் வீட்டில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் குடும்ப தகராறு காரணமாக மனஉளைச்சலில் இருந்து வந்த ராதிகா வீட்டில் இருந்து எலி மருந்தை(வி‌ஷம்) எடுத்து தின்று விட்டு மயங்கி விழுந்தார். இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு ஆலங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ராதிகா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த ராதிகாவின் தந்தை சீனிவாசன் வலங்கைமான் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராதிகாவுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆவதால் மன்னார்குடி உதவி கலெக்டர் பால்துரை மேல் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story