ஆசை வார்த்தை கூறி பிளஸ்–2 மாணவியை கற்பழித்த வாலிபர் கைது உடந்தையாக இருந்த தந்தையும் சிக்கினார்
ஊத்துக்கோட்டை அருகே பிளஸ்–2 மாணவியை ஆசை வார்த்தைக்கூறி ஏமாற்றி கற்பழித்ததாக வாலிபரும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக அவரது தந்தையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
ஊத்துக்கோட்டை,
ஊத்துக்கோட்டை அருகே பிளஸ்–2 மாணவியை ஆசை வார்த்தைக்கூறி ஏமாற்றி கற்பழித்ததாக வாலிபரும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக அவரது தந்தையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஏரிகுப்பம் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி அங்குள்ள பள்ளியில் பிளஸ்–2 படித்து வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்தவர் நாகேஷ். கூலி தொழிலாளியாக இருந்து வருகிறார். இவரது மகன் சுரேஷ் (வயது 23). இவர் நெல் அறுவடை செய்யும் வாகனத்தின் டிரைவராக வேலை செய்து வருகிறார்.
இவர் கடந்த சில நாட்களாக மாணவியை காதலித்து வந்ததாகவும், மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி கற்பழித்ததாக தெரிகிறது. இதனால் மாணவி 2 மாத கர்ப்பமானதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, இருவரும் ஜோடியாக வீட்டை விட்டு வெளியேறி ஆந்திர மாநிலத்தில் உள்ள காளகஸ்தி கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
நாகேஷ் மற்றும் உறவினர்கள் புதுமண ஜோடியை நேற்று முன்தினம் கிராமத்துக்கு திரும்ப அழைத்து வந்தனர். இந்நிலையில் இது தொடர்பாக மாணவியின் தந்தை ஊத்துக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில், மகளை ஏமாற்றி சுரேஷ் திருமணம் செய்து கொண்டதாகவும், இதற்கு அவரது தந்தை நாகேஷ் உடந்தையாக செயல்பட்டதாகவும் கூறியிருந்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் அனுராதா வழக்குப்பதிவு செய்து மாணவியை ஆசை வார்த்தை கூறி கற்பழித்து திருமணம் செய்ததாக சுரேஷ் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்ததாக அவரது தந்தை நாகேஷ் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்தார். பின்னர் போலீசார் 2 பேரையும் ஊத்துக்கோட்டை நீதிபதி முன் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.