என்.ஆர்.காங்கிரஸ் என்கிற மண் குதிரைக்கு வாக்களித்து ஏமாந்து போகாதீர் டி.கே.ரங்கராஜன் எம்.பி. பேச்சு
புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் என்கிற மண் குதிரைக்கு வாக்களித்து ஏமாந்து போகாதீர்கள் என டி.கே.ரங்கராஜன் எம்.பி. வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
புதுச்சேரி,
புதுச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தேர்தல் நிதியளிப்பு பொதுக்கூட்டம் சாரம் அவ்வை திடலில் நேற்று மாலை நடைபெற்றது.
கூட்டத்திற்கு கட்சியின் புதுச்சேரி பிரதேசக்குழு செயலாளர் ராஜாங்கம் தலைமை தாங்கினார். கமிட்டி செயலாளர்கள் மதிவாணன், ரகு.அன்புமணி, அய்யப்பன், தமீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மத்திய கமிட்டி உறுப்பினரும், எம்.பி.யுமான டி.கே.ரங்கராஜன், மத்திய கமிட்டி உறுப்பினர் சுதா, தமிழ் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆறுமுக நயினார், பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
முன்னதாக பொது மக்களிடம் திரட்டப்பட்ட தேர்தல் நிதியை கட்சியின் புதுவை நிர்வாகிகள், டி.கே.ரங்கராஜன் எம்.பி.யிடம் வழங்கினார்கள்.
கூட்டத்தில் டி.கே.ரங்கராஜன் எம்.பி. பேசியதாவது:–
பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ்.–ன் ஒரு பிரிவு. மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்–அமைச்சரையும், அமைச்சர்களையும் டெல்லிக்கு சென்று தங்களின் உரிமைகளை கேட்டு போராடும் நிலைக்கும், வீதியில் இறங்கி போராடும் சூழ்நிலைக்கும் தள்ளியது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்படாமல் விடமால் கவர்னரை கொண்டு தடுத்தனர்.
என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, பாரதீய ஜனதா மற்றும் அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளார். அவர் நல்லவர் தான், ஆனால் வல்லவர் இல்லை. தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க. அரசின் நிலைப்பாடு எனக்கு நன்றாக தெரியும்.
புதுவையில் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளரை நிறுத்தி வெற்றிபெற வைக்க முடியாது. அதனால் என்.ஆர்.காங்கிரசை என்கிற மண்குதிரையை நிறுத்தியுள்ளனர். எனவே மண்குதிரைக்கு வாக்களித்து ஏமாந்து போகாதீர். காங்கிரஸ் கட்சி மதசார்பற்ற கட்சி. மத்தியில் மதசார்பற்ற ஆட்சி அமைய அனைவரும் பாடுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக செயலாளர் நடராஜன் வரவேற்றார். பிரதேச செயற்குழு உறுப்பினர்கள் நிலவழகன், ராமச்சந்திரன், தமிழ்செல்வன், சீனுவாசன், பிரபுராஜ், சத்தியா மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் நகரக்குழு உறுப்பினர் ஜோதிபாசு நன்றி கூறினார்.