தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் ‘தேர்தல் மன்னன்’ பத்மராஜன் வேட்பு மனுதாக்கல் 200-வது முறையாக போட்டியிடுகிறார்


தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் ‘தேர்தல் மன்னன்’ பத்மராஜன் வேட்பு மனுதாக்கல் 200-வது முறையாக போட்டியிடுகிறார்
x
தினத்தந்தி 20 March 2019 4:30 AM IST (Updated: 20 March 2019 2:34 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட ‘தேர்தல் மன்னன்’ பத்மராஜன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். 200-வது முறையாக தேர்தலில் போட்டியிடுவதாக அவர் கூறினார்.

தர்மபுரி,

சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்தவர் பத்மராஜன் (வயது 61). இவருக்கு மனைவி, மகன் உள்ளனர். இவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறுவதற்காக, இந்தியாவில் எங்கு தேர்தல் நடந்தாலும் அங்கு சென்று வேட்பு மனு தாக்கல் செய்வதை வழக்கமாக கொண்டு உள்ளார். இதன் காரணமாக பத்மராஜனை ‘தேர்தல் மன்னன்’ என்று அழைக்கிறார்கள். தர்மபுரி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுதாக்கல் நேற்று தொடங்கியது. தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான மலர்விழியிடம் பத்மராஜன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து நிருபர்களிடம் பத்மராஜன் கூறியதாவது:-

1988-ம் ஆண்டு முதல், இந்தியாவில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்கள், சட்டமன்ற தேர்தல்கள், கூட்டுறவு சங்க தேர்தல்கள் உள்ளிட்ட அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ளேன். இதுவரை 199 முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். தற்போது 200-வது முறையாக தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்து உள்ளேன்.

பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் நரசிம்மராவ், முன்னாள் முதல்- அமைச்சர்கள் ஜெயலலிதா, கருணாநிதி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை எதிர்த்து போட்டியிட்டு உள்ளேன். தேர்தலில் வெற்றி பெறுவது எனது நோக்கம் அல்ல. அதனால் வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பதில்லை.

கின்னஸ் சாதனை செய்ய வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு தொடர்ந்து தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறேன். இவ்வாறு ‘தேர்தல் மன்னன்’ பத்மராஜன் கூறினார்.

Next Story